சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை பாதிப்பு!

சென்னை தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு எதிரில் தனியார் திருமண மண்டபம் அருகே உள்ள இலவம் பஞ்சு மரம் ஒன்று திடீரென சாலையின் குறுக்கே சாய்ந்து விழுந்தது. அதன் அருகில் உள்ள மெட்ரோ ரெயிலின் வழித்தடம் இருந்ததால் சாலையின் மேற்புறத்தில் பாதி அளவும் மெட்ரோ வழித்தடத்தின் மேற்புறத்தில் பாதி அளவும் மரம் விழுந்து கிடந்ததால், திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டது.

மெட்ரோ ரெயிலின் வழித்தடத்தின் மேல்புற மின்சார கம்பிகளில் மரம் உரசிக் கொண்டிருந்ததால் மரத்தில் மின்சாரம் பாயக்கூடும் என்பதால் உடனடியாக வந்த தீயணைப்பு படை வீரர்கள் மரத்தை வெட்டி எடுக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. பின்னர் மெட்ரோ நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் மற்றும் விம்கோ நகரிலிருந்து வண்ணாரப்பேட்டை வரையிலான மெட்ரோ ரெயில் சேவை மரத்தை வெட்டி எடுக்கும் வரை சுமார் ஒரு மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. மரத்தை வெட்டிய பின்னர் மீண்டும் மெட்ரோ ரெயில் இயங்க தொடங்கியது.