Tamilசெய்திகள்

சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்தது

சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மூலமாக கொரோனா வைரஸ் தொற்றின் சராசரி பாதிப்பு விகிதம் 18.2 சதவீதமாக குறைந்துள்ளது என தமிழக நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழக நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது:- பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் அமைச்சர்கள் தலைமையிலும் பல்வேறு உயர் அலுவலர்கள் கொண்ட சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளில் தனி கவனம் செலுத்தப்பட்டு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் காரணமாக அப்பகுதிகளில் தற்பொழுது கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பின் அளவு குறைந்துள்ளது, இதில் குறிப்பாக சென்னை சமூக களப்பணியாளர்கள் இத்திட்டத்தின் மூலம் வீடுகள்தோறும் சென்று பொதுமக்களுக்கு வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் வைரஸ் அறிகுறிகளான காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்றவை இருந்தால் அவர்களை உடனடியாக கண்டறிந்து பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு அழைத்து செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் 12,000 பணியாளர்களைக் கொண்டு சென்னையில் உள்ள சுமார் 12 லட்சம் வீடுகளுக்கு நாள்தோறும் சென்று பொதுமக்களுக்கு ஏதேனும் காய்ச்சல், சளி மற்றும் இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளனவா என கணக்கெடுப்பு செய்யப்பட்டு அவர்களுக்கு தகுந்த மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதேபோன்று 98 மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் தன்னார்வலர்கள் வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர், தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி வைரஸ் தொற்று பாதித்த நபர்களுடன் தொடர்பில் இருந்த நபர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த நபர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப் படுத்துவதற்காக 50,000 படுக்கை வசதிகள் கொண்ட தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் ஏற்படுத்தப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உணவு உட்பட அடிப்படைத் தேவைகள் வழங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுநாள் வரை சுமார் 10 ஆயிரம் நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பாதுகாப்பாக வீடு திரும்பியுள்ளனர்,தமிழக முதலமைச்சர் அவர்களின் மேற்குறிப்பிட்ட சிறப்பு நடவடிக்கைகளின் காரணமாக, ஜூன் மாதத்தில் நோய்த்தொற்று விகிதம் சராசரியாக 24.2 சதவீதத்தில் இருந்தது, ஆனால் அது தற்போது ஜூலை மாதத்தில் சராசரியாக 24.2 சதவீதத்தில் இருந்தது, ஆனால் அது தற்போது ஜூலை மாதத்தில் சராசரியாக 18.2 சதவீதமாக குறைந்துள்ளது என்பதே இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. இதில் குறிப்பாக 7-7-2020 நேற்று ஒரு நாளில் மட்டும் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 10,139 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதில் 1,203 நபர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது 11.87 சதவீதமாகும், தமிழக முதலமைச்சரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் தொடர் கண்காணிப்பின் காரணமாக பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தொற்று கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது எனவே துறை சார்ந்த அலுவலர்கள் அனைவரும் தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆலோசனைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தவறாமல் பின்பற்றி வைரஸ் தொற்று நோயிலிருந்து பொதுமக்களை காக்க தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *