சூர்யாவின் 4 திரைப்படங்கள் நேரடியாக ஒடிடியில் ரிலீஸ்!

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, நடிப்பதோடு மட்டுமில்லாமல் படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்த 36 வயதினிலே, பசங்க 2, 24, உறியடி 2, கடைக்குட்டி சிங்கம், பொன்மகள் வந்தாள், சூரரைப் போற்று ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

இந்நிலையில், சூர்யா தயாரிப்பில் தற்போது ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’, ‘உடன்பிறப்பே’, ‘ஜெய் பீம்’, ‘ஓ மை டாக்’ ஆகிய படங்கள் உருவாகி உள்ளன. இந்த 4 படங்களும் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ படம் வருகிற செப்டம்பர் மாதம் ஓடிடி-யில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பிக்பாஸ் பிரபலம் ரம்யா பாண்டியன் ஹீரோயினாக நடித்துள்ள இப்படத்தை அரிசில் மூர்த்தி இயக்கி உள்ளார். பாடகர் கிரிஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு மைனா சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சசிகுமார் – ஜோதிகா நடிப்பில் உருவாகி உள்ள ‘உடன்பிறப்பே’ திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளது. கத்துக்குட்டி படத்தை இயக்கி பிரபலமான இயக்குனர் இரா.சரவணன் இப்படத்தை இயக்கி உள்ளார். மேலும் சூரி, சமுத்திரக்கனி, கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ள ‘ஜெய் பீம்’ திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளது. கூட்டத்தில் ஒருவன் படத்தின் இயக்குனர் ஞானவேல் இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் சூர்யா, பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

அருண் விஜய், விஜய்குமார், அர்னவ் விஜய் ஆகியோர் நடித்துள்ள படம் ‘ஓ மை டாக்’. இப்படம் வருகிற டிசம்பர் மாதம் ஓடிடி-யில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. குழந்தைகளை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்தை சரோவ் சண்முகம் இயக்கி உள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்துக்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.