சூர்யகுமார் யாதவை பற்றி விவரிக்க வார்த்தைகளே இல்லை – ரோகித் சர்மா

ஆசிய கோப்பை போட்டியில் ஆங்காங்கை வீழ்த்தி இந்திய அணி ‘சூப்பர் 4’ சுற்றுக்கு தகுதி பெற்றது. துபாயில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப் பட்ட 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 192 ரன் குவித்தது. சூர்யகுமார் யாதவ் 26 பந்தில் 68 ரன்னும் (6 பவுண்டரி, 6 சிக்சர்), வீராட் கோலி 44 பந்தில் 59 ரன்னும் (1 பவுண்டரி, 3 சிக்சர்), லோகேஷ் ராகுல் 36 ரன்னும் (2 சிக்சர்) எடுத்தனர். பின்னர் ஆடிய ஆங்காங் அணியால் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் 40 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

பாபர் ஹயாத் அதிகபட்சமாக 35 பந்தில் 41 ரன்னும் ( 3 பவுண்டரி, 2 சிக்சர்) கின்ஷிட் ஷா 30 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஜடேஜா, அவேஷ் கான் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினார்கள். இந்த வெற்றி மூலம் இந்திய அணி ‘சூப்பர் 4’ சுற்றுக்கு தகுதி பெற்றது.

தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது. இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

தொடக்கத்திலேயே எங்களது பேட்டிங் நன்றாக இருந்தது. இறுதியில் நல்ல ஸ்கோரை குவித்தோம். பந்து வீச்சு பொறுப்பான முறையில் இருந்தது. பந்து வீச்சில் இன்னும் கொஞ்சம் சிறப்பாக செய்து இருக்கலாம். சூர்யகுமார் யாதவின் ஆட்டம் மிகவும் பிரமாதமாக இருந்தது. அவரை பற்றி விவரிக்க வார்த்தைகள் இல்லை. தன்னம்பிக்கையுடன் பயமில்லாமல் பேட்டிங் செய்கிறார். அவர் ஆடிய ஷாட்கள் ஒவ்வொன்றும் அபாரமாக இருந்தது. ஒவ்வொரு வீரரும் தங்களுக்கான வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு விளையாடி வருகிறார்கள்.

இவ்வாறு ரோகித் சர்மா கூறியுள்ளார்.