சூர்யகுமார் ஆடிய சில ஷாட்களை என் வாழ்க்கையில் இதுவரை நான் பார்த்ததே இல்லை – நியூசிலாந்த் கேப்டன் கேன் வில்லியம்சன்

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் சூர்யகுமார் யாதவ், மூன்றாவது வீரராக களம் இறங்கி 51 பந்துகளில் 113 ரன்கள் விளாசினார். இதில் 11 பவுண்டர்களும், ஏழு சிக்சர்களும் அடங்கும். நடப்பாண்டில் சூர்யகுமார் யாதவ் அடித்த இரண்டாவது சதம் இதுவாகும். இதனை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 126 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

தோல்வி குறித்து பேசிய நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், இது எங்களுடைய சிறந்த ஆட்டம் கிடையாது என்று குறிப்பிட்டார். நாங்கள் களத்தில் சிறப்பாக செயல்படவில்லை. சூர்ய குமாரின் இன்னிங்ஸ் உலகத்தரம் வாய்ந்தது. என் வாழ்நாளில் பார்த்த சிறந்த ஆட்டங்களில் இதுவும் ஒன்று. சூர்யகுமார் ஆடிய சில ஷாட்களை என் வாழ்க்கையில் இதுவரை நான் பார்த்ததே இல்லை.

அனைத்தும் பிரமிக்கும் வகையில் இருந்தது. நாங்கள் இன்று சரிவர செயல்படவில்லை. எங்களுக்கு பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் ஒரு உத்வேகம் கிடைக்கவில்லை. நாங்கள் முக்கிய கட்டத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தாமல் இருந்தோம். இதேபோன்று முக்கிய நேரத்தில் பேட்டிங்கில் நான் சோபிக்கவில்லை.நிச்சயமாக இந்த தோல்வி வெறுப்பை தருகிறது. மீண்டும் சொல்கிறேன் சூர்யகுமார் யாதவ் மட்டும் தான் இதற்கு காரணம். அவருடைய ஆட்டம் தான் இன்று மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

நாங்கள் பேட்டிங் செய்யும்போது பந்து கொஞ்சம் ஸ்விங் ஆனது. இதனை பயன்படுத்திக் கொண்டு இந்திய வீரர்கள் நன்றாக பந்து வீசினார்கள்.எங்களுடைய ஆட்டத்தில் சில குறைகள் இருக்கிறது. அதனை நாங்கள் சரி செய்ய வேண்டும். சில விஷயங்களில் நாங்கள் முன்னேற்றம் அடைய வேண்டும். சிறு தவறுகளால் தான் சில சமயம் போட்டியின் முடிவே மாறுகிறது. சில சமயம் சூர்யகுமார் யாதவ் போன்று சிலர் சிறப்பான இன்னிங்ஸை ஆடுவார்கள். அது நமக்கு தோல்வியை தரலாம்.தற்போது உலகத்தில் சூர்ய குமார் தான் சிறந்த வீரராக இருக்கிறார் என்று வில்லியம்சன் கூறினார்.