சுவிக்கி, சுமாட்டோ நிறுவனங்களுக்கும் ஜி.எஸ்.டி வரி!

ஓட்டல் உணவுப் பண்டங்களுக்கு ஜி.எஸ்.டி வரியின் கீழ் ஏற்கனவே வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் பெரும்பாலான சிறிய ஓட்டல்கள் இந்த வரிகளை வாடிக்கையாளர்களிடம் இருந்து வாங்கிவிட்டு அவற்றை அரசுக்கு முறையாக கட்டுவது இல்லை.

2020- 2021 நிதியாண்டில் மட்டும் ஓட்டல்கள் இந்த வகையில் ரூ.2 ஆயிரம் கோடி வரையில் வரி ஏய்ப்பு செய்து இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

எனவே ஓட்டல்களில் முறையாக வரி வசூல் செய்வதற்கு திட்டங்களை செய்து இருக்கிறார்கள். நாளை லக்னோவில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. அதில் இது சம்பந்தமாக முக்கிய அறிவிப்புகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.

மேலும் ஓட்டல் உணவுகளை வீடுகளுக்கு சென்று சப்ளை செய்யும் சுவிக்கி- சுமாட்டோ போன்ற ஆன்லைன் வினியோக நிறுவனங்களையும் ஜி.எஸ்.டி. வரியின் கீழ் கொண்டு வர உள்ளனர்.

இணையதள வர்த்தக நிறுவனங்களுக்கு ஏற்கனவே ஜி.எஸ்.டி. வரிமுறை உள்ளது. சுவிக்கி- சுமாட்டோ போன்ற உணவு சப்ளை செய்யும் நிறுவனங்களும் இணையதள வர்த்தக ரீதியாகத்தான் இந்த பணிகளை செய்கின்றன.

எனவே அதன் அடிப்படையில் இந்த நிறுவனங்களையும் ஜி.எஸ்.டி. வரியின் கீழ் கொண்டு வர முடிவு செய்து இருக்கிறார்கள். நாளை இது பற்றி முடிவு எடுக்கப்படும். ஏற்கனவே ஓட்டலுக்கும் வரி செலுத்திவிட்டு அதன் சப்ளை நிறுவனங்களுக்கும் வரி செலுத்தி இரட்டை வரிமுறை ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

எனவே அதை தவிர்க்க சுவிக்கி- சுமாட்டோ நிறுவனங்களுக்கு உணவு சப்ளை செய்வதை ஓட்டல்கள் தனிக்கணக்காக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நடைமுறையும் வர இருக்கிறது.

மேலும் இந்த உணவு சப்ளை நிறுவனங்கள் தங்கள் பில் முறைகளை கையாளும் சாப்ட்வேர்களில் மாற்றங்களை கொண்டு வரவும் ஜி.எஸ்.டி. கவுன்சில் பரிந்துரை செய்ய இருக்கிறது.

உணவு சப்ளை நிறுவனங்களுக்கும் ஜி.எஸ்.டி. வரி விதிக்க இருப்பதால் உணவு பொருட்கள் விலை உயர்வதற்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.