சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ் அறிக்கை

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கரூர், நாமக்கல் மாவட்டங்களில் காவிரி மற்றும் அமராவதி ஆறுகளில் குழந்தைகள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து விட்டதாக ஆண்டுக்கு இரு முறை செய்தி வெளியாவது வாடிக்கையாகி விட்டது. அதற்கு காரணம் 50 அடி ஆழத்திற்கு மணல் அள்ளப்படுவது தான். இவ்வளவு தீமைகளை ஏற்படுத்தும் மணல் குவாரிகளை திறந்தே தீருவோம் என அரசு பிடிவாதம் பிடிப்பதன் காரணம் தான் தெரியவில்லை.

கட்டுமானப் பணிகளுக்கு மணல் தேவை என்று கூறி மணல் கொள்ளையை நியாயப்படுத்த முடியாது. கேரளத்தில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது; கர்நாடகத்தில் மணல் அள்ள கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஆனாலும், அந்த மாநிலங்களில் கட்டுமானப் பணிகள் தடைபடாமல் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. தமிழ்நாடு அரசும் நினைத்தால் மணல் இறக்குமதியை அதிகரிப்பது, செயற்கை மணல் உற்பத்தி ஆகியவற்றின் மூலம் தமிழகத்தின் மணல் தேவையை பூர்த்தி செய்யலாம்.

எனவே, தமிழ்நாட்டில் புதிய மணல் குவாரிகளை திறப்பது, எந்திரங்களைக் கொண்டு மணல் அள்ள அனுமதிப்பது போன்ற முடிவுகளை தமிழக அரசு கைவிட்டு, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும். மாறாக, புதிய மணல் குவாரிகளை திறக்க அரசு முயன்றால், அவற்றுக்கு எதிராக மக்களைத் திரட்டி பா.ம.க. சார்பில் மாபெரும் போராட்டத்தை நானே தலைமையேற்று நடத்துவேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.