சிவந்தி ஆதித்தனார் சாதனைகளை அறிந்துக் கொள்ள பிரத்யேக நூலகம்

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் அருகிலேயே அதற்கான நிர்வாக அலுவலகம் அமைந்துள்ளது. அந்த அலுவலகத்தின் ஒரு பகுதியில் சிறப்பான நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த நூலகத்தில் ஏராளமான புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் கல்வி, ஆன்மீகம், விளையாட்டு, பத்திரிகை ஆகிய துறைகளில் செய்த சாதனைகளை பிரதிபலிக்கும் வகையில் ஏராளமான புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் தினத்தந்தி பதிப்பகத்தின் புத்தகங்கள் அந்த நூலகத்தில் இடம் பெற்றுள்ளது. பொதுமக்கள், மாணவ- மாணவிகள் அந்த நூலகத்தை பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அந்த நூலகத்துக்குள் அமர்ந்து வசதியாக படிப்பதற்கு ஏற்ப இருக்கை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை சுற்றி 3 கல்வெட்டுகள் நிறுவப்பட்டுள்ளன. டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் ஆன்மீக பணியை வெளிப்படுத்தும் வகையில் ஒரு கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது. அந்த கல்வெட்டில் அவர் தனது வாழ்நாள் முழுவதும் எந்தெந்த ஆலயங்களுக்கு திருப்பணிகள் செய்தார், மண்டபங்கள் கட்டி கொடுத்தார் என்ற விவரங்கள் இடம் பெற்றுள்ளன.

தென்காசி ராஜகோபுர திருப்பணியை செய்து முடித்து குட முழுக்கு செய்த தகவலும் அந்த சாதனைக்காக அவருக்கு காஞ்சி சங்கராச்சாரியார், “ஆஸ்திக சிகாமணி” என்று பட்டம் வழங்கியதையும் அந்த கல்வெட்டில் காண முடிகிறது. சிவந்தி ஆதித்தனாரின் விளையாட்டு பணிகளை சுட்டிக்காட்டும் வகையில் மற்றொரு கல்வெட்டு நிறுவப்பட்டுள்ளது. அந்த கல்வெட்டில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் விளையாட்டுத் துறைக்கு செய்த சேவைகள் முழுமையாக இடம் பெற்றுள்ளன.

மேலும் விளையாட்டு துறைக்கு அவர் செய்த பணிகளை பாராட்டி சர்வதேச ஒலிம்பிக் சங்கம், “ஸ்போர்ட்ஸ் அண்டு ஸ்டடி அவார்டு” வழங்கி இருப்பதையும் கல்வெட்டில் பார்க்கலாம். தமிழகத்தில், இந்தியாவில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரால் விளையாட்டு துறை எப்படி மேம்பட்டது என்ற தகவல்களும் அந்த கல்வெட்டில் இடம் பெற்றுள்ளன.

மூன்றாவதாக அமைந்துள்ள கல்வெட்டில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் பத்திரிகை பணிகள் பட்டியலிடப்பட்டு உள்ளன. பத்திரிகை உலகின் பிதாமகனான சி.பா.ஆதித்தனார் மூலம் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பயிற்சி பெற்று 15 பதிப்புகளை தொடங்கி சாதனை படைத்ததும் அதில் இடம் பெற்றுள்ளது.

அதோடு நெல்லையில் 1959-ம் ஆண்டு தமிழ்நாட்டின் முதல் மாலை நாளிதழான “மாலைமுரசு” டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் தொடங்கி வெற்றி பெற்றதும் அந்த கல்வெட்டில் இடம் பெற்றுள்ளது. டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் தினத்தந்தி மட்டுமின்றி அதன் விழுதுகளாக மாலைமலர், ராணி, ராணிமுத்து, ஹலோ எப்.எம்., தந்தி டி.வி., டி.டி. நெக்ஸ்ட் என்று பல்வேறு ஊடகங்கள் இன்று கொடி கட்டி பறப்பதற்கு காரணமாக இருந்தவர் என்றும் அந்த கல்வெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று கல்வெட்டுகளும் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் பத்திரிகை, ஆன்மீகம், விளையாட்டு பணிகளை காலம் காலமாக மக்களுக்கு தெரிவித்துக் கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *