சிறையில் சசிகலாவுக்கு சலுகை வழங்கப்பட்டது! – விசாரணையில் அறிக்கை வெளியீடு

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

சிறையில் சசிகலாவுக்கு விதிமுறைகளை மீறி விசே‌ஷ சலுகைகள் அளிக்கப்படுவதாக பரபரப்பு புகார் எழுந்தது. இது தொடர்பாக அப்போதைய கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா திடீர் சோதனை நடத்தி விதி மீறல்களை கண்டுபிடித்தார்.

சசிகலாவுக்கு விசே‌ஷ சலுகைகள் அளிக்கப்பட்டது தொடர்பான வீடியோ ஆதாரங்களும் சிக்கின. அந்த வீடியோ தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

சசிகலாவுக்கு சலுகைகள் வழங்க கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி. சத்யநாராயணராவ் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாகவும் டி.ஐ.ஜி. ரூபா குற்றம் சாட்டினார்.

சிறை விதிகளை மீறி சசிகலா, இளவரசி ஆகியோருக்கு 4 விசே‌ஷ அறைகள் ஒதுக்கப்பட்டன. அவர்களுக்கு தனி சமையலறை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

மற்ற கைதிகளுக்கு அனுமதிக்கப்படும் பார்வையாளர்கள் எண்ணிக்கையை விட சசிகலாவுக்கு அதிக அளவிலான பார்வையாளர்களை சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டது போன்ற விதி மீறல்கள் நடந்ததாக ரூபா குற்றம் சாட்டினார்.

சசிகலாவுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களை கர்நாடக ஊழல் தடுப்பு பிரிவு போலீசாருக்கும், சிறைத்துறை டி.ஜி.பிக்கும் அனுப்பி இருந்தார்.

தன் மீதான லஞ்சப் புகாரை அப்போதைய டி.ஜி.பி.சத்யநாராயண ராவ் மறுத்தார். ரூபா மீது அவதூறு வழக்கு தொடரப் போவதாகவும் அறிவித்தார். இதனால் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து ரூபா சிறைத்துறையில் இருந்து போக்குவரத்து துறைக்கு மாற்றப்பட்டார்.

இதற்கிடையே சசிகலாவுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி விணய்குமார் தலைமையில் உயர்மட்டகுழுவை கர்நாடக அரசு நியமித்தது.

இந்த குழுவில் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியும், பெங்களூரு குற்றப்பிரிவு கூடுதல் கமி‌ஷனருமான ரவி, மைசூரு சிறை தலைமை சூப்பிரண்டு ஆனந்த் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.

இவர்கள் பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்று விசாரணை நடத்தினர். புகார் கூறிய அதிகாரி ரூபா மற்றும் புகாருக்கு உள்ளான சத்யநாராயணராவ் ஆகியோரிடம் வாக்கு மூலம் பெற்றனர்.

சிறை அதிகாரிகள், ஊழியர்களிடமும் விசாரணை நடத்தினர். சிறையில் கண்காணிப்பு கேமிராக்கள் இருந்த இடங்களையும் பார்வையிட்டனர். சசிகலா, இளவரசி தங்கி இருந்த அறைகளையும் பார்வையிட்டு அவர்களிடமும் விசாரணை நடத்தினர்.

இந்த குழுவின் பதவிக் காலம் 2 முறை நீடிக்கப்பட்டது. அதன் பிறகு விசாரணை அறிக்கையை இந்த குழுவினர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கர்நாடக உள்துறை செயலாளரிடம் தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில் அறிக்கை விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதில் கூறப்பட்டுள்ள விவரம் வருமாறு:-

சிறையில் விதிமுறைகளை மீறி சசிகலாவுக்கும், இளவரசிக்கும் தங்க 4 அறைகள் ஒதுக்கப்பட்டு இருந்தன. அந்த அறைகளில் ஏர்கண்டிசன் வசதி செய்யப்பட்டு இருந்தது. பூனைகள் நுழையாத வகையில் அறைகளில் திரைச்சீலைகள் போடப்பட்டு இருந்தன.

குக்கர் உள்ளிட்ட சமையல் பாத்திரங்கள் அவருக்கு கொடுக்கப்பட்டு இருந்தன. சசிகலாவும், இளவரசியும் தாங்களே சமையல் செய்து சாப்பிடவும் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இது சம்மந்தமாக டி.ஐ.ஜி. ரூபா புகைப்பட ஆதாரங்களை கொடுத்து இருந்தார்.

நாங்கள் விசாரணைக்கு சென்ற போது சமையல் அறை மாயமாகி இருந்தது. ஒரு அறையில் சோதனை நடத்தியபோது சமையலுக்கான மஞ்சள் தூள் பாக்கெட்டை கண்டுபிடித்து கைப்பற்றினோம். இதனால் சசிகலா தங்கி இருந்த அறையில் சமையல் செய்தது உறுதி செய்யப்பட்டது.

சசிகலா, இளவரசி ஆகியோர் தங்கி இருந்த பகுதிகளில் ஆண் காவலர்கள் யாரும் பணியமர்த்தப்பட வில்லை. பெண் காவலர்கள் மட்டுமே அங்கு பணியில் இருந்தனர்.

சசிகலா, இளவரசி ஆகியோர் கைதிகள் அணியும் உடை அணியாமல் சொந்த உடைகள் அணிய அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் 2 பேரும் ஷாப்பிங் செல்லவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சசிகலா சுடிதார் உடையிலும், இளவரசி சேலையிலும், பெண்கள் சிறையின் நுழைவு வாயில் வழியாக வெளியே சென்று ஷாப்பிங் செய்து கையில் பையுடன் வரும் காட்சி சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகி உள்ளது.

இதுபோல 74 ஆதாரங்களை ரூபா கொடுத்திருந்தார். நாங்கள் சிறைக்கு சென்று ஆய்வு நடத்தியபோது சில ஆதாரங்களை அழிக்க அதிகாரிகள் முயற்சி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சி.சி.டி.வி. கேமிராக்களையும் இயங்கவிடாமல் அதிகாரிகள் சுவிட்ச்-ஆப் செய்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. சசிகலாவுக்கு ஒதுக்கப்பட்ட 4 அறைகளில் ஒரு அறையில் சொகுசு கட்டில் மற்றும் படுக்கை விரிப்புகள் போடப்பட்டு இருந்தது.

சசிகலா சிறையில் பார்வையாளர்களை சந்திக்க ஒரு தனி அறை ஒதுக்கப்பட்டு இருந்தது. இதற்காக சிறையில் உள்ள பயன்படுத்தப்படாத ஒரு அறையை அவருக்கு அலங்கரித்து அதிகாரிகள் ஒதுக்கி கொடுத்தனர். மற்ற கைதிகள் பார்வையாளர்களை சந்திக்க குறிப்பிட்ட அளவில் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சசிகலாவுக்கு அதிக அளவில் பார்வையாளர்களை சந்திக்க அனுமதிக்கப்பட்டார்.

சசிகலாவுக்கு ஏ.கிளாஸ் வசதியை எந்த நீதிமன்றமும் பரிந்துரைக்கவில்லை. ஆனால் சிறைத்துறை அதிகாரிகள் ஏ.கிளாஸ் வசதியை அவருக்கு செய்து கொடுத்துள்ளனர். இது குறித்து சிறைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, பாதுகாப்பு காரணங்களுக்காக அவருக்கு தனி அறை ஒதுக்கியதாக தெரிவித்தனர்.

நீதிமன்றத்திடம் ஏன் அனுமதி வாங்கவில்லை என்று கேட்டபோது அவர்கள் பதில் அளிக்க மறுத்து விட்டனர். இது கர்நாடக சிறைத்துறை விதிகளின்படி அப்பட்டமான விதிமுறை மீறல் ஆகும்.

இந்த சிறையில் 28 அறைகள் உள்ளன. இந்த அறைகளில் 100க்கு மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு இருந்தனர். சசிகலாவுக்கு வசதி செய்து கொடுக்கவே ஒரு அறையில் 4 பெண் கைதிகள் தங்குவதற்கு பதிலாக அளவுக்கு அதிகமாக பெண் கைதிகள் அடைக்கப்பட்டனர்.

குக்கரில் சசிகலா சமையல் செய்தது பற்றி சிறைத் துறை ஊழியர்களிடம் நாங்கள் கேட்டபோது அது கைதிகளுக்கு உணவு சமைக்க பயன்படுத்தப்பட்டதாக அவர்கள் கூறினர். ஆனால் அது உண்மையல்ல.

19-7-2017 அன்று நாங்கள் சிறையில் ஆய்வு நடத்திய போது சசிகலா அறையில் இருந்த அலமாரிகளை அகற்றிக் கொண்டு இருந்ததை நாங்களே நேரில் பார்த்தோம். சசிகலாவுக்கு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டதும் உண்மை தான். சிறையில் சசிகலா, இளவரசிக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதும் உண்மை தான்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட கர்நாடக அரசு இதுபற்றி ஊழல் தடுப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

சசிகலாவுக்கு சலுகைகள் கொடுத்ததுபோல முத்திரைத் தாள் மோசடி வழக்கில் கைதாகி சிறையில் இருந்த அப்துல்கரீம் டெல்கிக்கும் சலுகைகள் வழங்கப்பட்டதும் உண்மைதான் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

ஊழல் தடுப்பு துறை விசாரணைக்குப்பின் இதில் மேல் நடவடிக்கை எடுக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

இதனால் சசிகலாவுக்கு சிறையில் நன்னடத்தை பாதிக்கப்படும் என்றும் முன் கூட்டியே விடுதலையாகும் வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *