சிறையில் சசிகலாவிடம் வருமான வரித்துறையினர் விசாரணை!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு, ஜெயா டிவி அலுவலகம் ஆகியவற்றில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு சோதனை நடத்தினர். இதே போல சசிகலா பங்குதாரராக உள்ள நிறுவனங்களின் அலுவலகங்கள், அவரது உறவினர்கள் டிடிவி தினகரன், விவேக் உள்ளிட்டோரின் உறவினர்களின் வீடுகள், அவர்களுக்கு தொடர்புடைய அலுவலகங்கள் உட்பட 180-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்தது.

சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு உட்பட பல்வேறு இடங்களில் 5 நாட்களுக்கும் மேலாக நடந்த இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், சொத்துகள் ஆகியவற்றை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆராய்ந்தனர்.

அதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அதிகாரிகள் சசிகலாவின் உறவினர்களான டிடிவி தினகரன், விவேக், கிருஷ்ண ப்ரியா உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிடம் விசாரணை நடத்த சென்னை மண்டல வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக சிறைத்துறையிடம் அனுமதி பெறப்பட்டது.

அதன்படி, ஒரு பெண் உள்ளிட்ட 5 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் குழு இன்று காலை பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்றது. அங்கு சசிகலாவிடம் விசாரணையை தொடங்கினர். இன்றும், நாளையும் விசாரணை நடத்துவார்கள் என தெரிகிறது. இந்த விசாரணையில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் நடவடிக்கைகளை தொடர வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *