Tamilசெய்திகள்

சிறைச்சாலையில் கைதிகள் சமைக்கும் பிரியாணியை ஆன்லைனில் விற்பனை செய்ய முடிவு

தமிழக சிறைத்துறை சார்பில் கடந்த 2015-ம் ஆண்டு சிறை பஜார் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின்படி சிறை கைதிகள் தயாரிக்கப்படும் உணவு மற்றும் இதர பொருட்கள் நேரடியாக விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

கோவை மத்திய சிறையில் தண்டனை, விசாரணை கைதிகள் என மொத்தம் 1,850 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதே போல பெண்கள் தனிச்சிறையில் 40 கைதிகள் உள்ளனர். இவர்களில் நன்னடத்தை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட கைதிகள் சிறை பஜார் வேலைகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

காந்திபுரத்தில் மத்திய சிறைக்கு சொந்தமான இடத்தில் செயல்படும் சிறை பஜாரில் காலையில் இட்லி, தோசை, பூரி, கிச்சடி, பொங்கல் போன்ற உணவுகளும், மதியம் சாப்பாடு, தக்காளி சாப்பாடு, லெமன் சாப்பாடு, பிரியாணி, தயிர் சாப்பாடு போன்ற உணவுகளும், இரவு இட்லி, தோசை போன்ற உணவுகளும் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் இங்கு பேக்கரி பொருட்கள், இனிப்பு, காரம் மற்றும் சோப் ஆயில், பினாயில், காக்கி சீருடை துணி, ரெடிமேட் சட்டை, போர்வை, செக்கு எண்ணெய் உள்ளிட்ட பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

சிறையில் தயாரிக்கப்படும் பொருட்களின் விற்பனையை மேம்படுத்த ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய சிறைத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது, சிறை பஜார் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் கைதிகளின் தயாரிப்புகளை பெற முடியும்.

இது குறித்து ஜெயில் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் கூறும்போது, உணவு பொருட்கள் ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யப்படுவது தற்போது அதிகரித்துள்ளது. எனவே கோவை மத்திய சிறை பஜாரில் கைதிகள் தயாரிக்கும் உணவு பொருட்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். இதற்காக ஆன்லைன் நிறுவனங்களிடம் ஆலோசித்து வருகிறோம். விரைவில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்றார்.

சிறை அதிகாரிகள் கூறும்போது, ஆன்லைன் உணவு விற்பனை திட்டம் செயல்பாட்டுக்கு வரும் போது 300 கிராம் பிரியாணி, கோழிகால் வறுவல், கப் கேக், சப்பாத்தி, ஊறுகாய் , வாழை இலை உள்ளிட்டவை அடங்கிய மதிய உணவு விற்கப்பட உள்ளது. இதற்காக ரூ. 120 முதல் ரூ. 130 வரை பணம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *