சாலைப் பாதுகாப்பு வார விழா – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-

பொதுமக்களிடையே சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை தவிர்க்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் “சாலைப் பாதுகாப்பு வாரம்” கடை பிடிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு, 31-வது சாலைப் பாதுகாப்பு வார விழா 20-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை கடைபிடிக்கப்படும். (26-ந்தேதி நீங்கலாக)

சாலைப் பாதுகாப்பு வார விழாவில், சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றல், தலைக்கவசம் மற்றும் சீட்பெல்ட் அணிவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், ஓட்டுநர்களுக்கு இலவச மருத்துவ முகாம்கள் நடத்துதல், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு சாலைப் பாதுகாப்பு விதிகள் குறித்த போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

தமிழ்நாடு அரசு, மேற் கொண்ட பல்வேறு சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகளின் காரணமாக, 2019-ம் ஆண்டில் ஏற்பட்ட சாலை விபத்துகள் 2016-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 25.60 சதவீதம் என்ற அளவிலும், சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் 43.10 சதவீதம் என்ற அளவிலும் குறைந்துள்ளன.

மேலும், ஒவ்வொரு 10,000 வாகனங்களுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2000-ம் ஆண்டில் 19 நபர்கள் என்ற அளவிலிருந்து 2019-ம் ஆண்டில் 3 நபர்களாக குறைந்துள்ளது.

அத்துடன், தமிழ்நாடு அரசின் ‘108’ அவசரகால ஆம்புலன்ஸ் வாகனங்கள், விபத்துக்கள் ஏற்படும் இடங்களுக்கு விரைவாக சென்று சேவை புரிவதால் விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள் பெருமளவில் தடுக்கப்பட்டு வருகின்றன.

சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்த்திடவும், “விபத்தில்லா தமிழ்நாடு” என்ற இலக்கினை எய்திடவும், மக்கள் அனைவரும் சாலை விதிகளை முழுமையாகக் கடைபிடித்து, தங்கள் பயணத்தை விபத்தில்லா பயணமாக அமைத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *