சாப்பாடு போட்டதை வைத்து அரசியல் செய்யாதீர்கள் – எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மூர்த்தி கண்டனம்

மதுரையில் வணிக வரித்துறை மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் பேசியதாவது:

சிவகாசியில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை பொம்மை முதல்வர் என்று கூறியுள்ளார். எடப்பாடி பழனிசாமி கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் வைத்து விட்டு சென்ற ரூ. 6 லட்சம் கோடி கடனை மு.க.ஸ்டாலின் சமாளித்து 20 மணி நேரம் உழைத்து வருகிறார். இந்தியாவின் முன்னோடியாக திகழும் அவரை பொம்மை முதல்வர் என்று கூறியது கண்டிக்கத்தக்கது.

எனது இல்ல திருமண விழாவில் அனைவருக்கும் சமமாக உணவு அளித்ததை வைத்து அரசியல் செய்கிறார்கள். மொத்தம் 50 ஆயிரம் பேர் சாப்பிட்டு இருப்பார்கள். ஒருவருக்கு ரூ.300 செலவு என்று வைத்துக் கொண்டாலும் ரூ. 15 கோடி தான் செலவாகி இருக்கும்.

ஆனால் அது தெரியாமல் யாரோ எழுதிக் கொடுத்த துண்டு சீட்டை வைத்துக்கொண்டு ரூ. 30 கோடி செலவு செய்ததாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். கடந்த ஆட்சி காலத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் எப்பவாவது கவனம் செலுத்தியது உண்டா? இந்த 6 மாத காலத்தில் இந்த துறைகள் மூலம் ‌ தமிழக அரசுக்கு எவ்வளவு வருவாய் ஈட்டி தந்திருக்கிறோம் என்பது அனைவருக்கும் தெரியும்.

எனவே எதை வைத்து அரசியல் செய்ய வேண்டும்? என்பதனை புரிந்து கொண்டு நாகரீகமாக அரசியல் செய்யுங்கள். சாப்பாடு போட்டதை வைத்து அரசியல் செய்யாதீர்கள். உங்கள் ஆட்சிக்காலத்தில் வைகையில் பாலம் கட்டி திறக்கும்போதே பாலம் இடிந்து விழுந்தது. “ஸ்மார்ட் சிட்டி” திட்டத்தில் கட்டப்பட்ட பெரியார் பஸ் நிலையத்தில் மழை நேரத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

பெரியார் பஸ் நிலையம் கட்ட தோண்டப்பட்ட மணல்கள் எத்தனை கோடிக்கு விற்கப்பட்டது? என்பது எங்களுக்கு தெரியாதா? எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக எத்தனை கோடி செலவு செய்தார்? என்பதும், அந்த பணம் எப்படி வந்தது என்பதும் எங்களுக்கு தெரியாதா? தற்போது இடைக்கால பொதுச்செயலாளராக எத்தனை கோடி செலவு செய்தார்? என்பது எங்களுக்கு தெரியும். எனவே அவர் அரசியல் நாகரீகம் தெரிந்து அரசியல் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.