Tamilசினிமா

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை பூஜா ஹெக்டே

முகமூடி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்தவர் பூஜா ஹெக்டே. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தெலுங்கு சினிமா பற்றி இவர் சொன்ன கருத்து சர்ச்சையாகி இருக்கிறது. சமீபத்தில் ஒரு பேட்டியில், தெலுங்கு சினிமாவில் பெண் கதாபாத்திரங்களைக் காட்சிப் பொருளாக்குவது குறித்து பூஜா ஹெக்டேவிடம் கேட்கப்பட்டது.

அவர் நடித்த ‘அலா வைகுந்தபுரமுலோ’ திரைப்படத்தின் காட்சியையும் இதற்கு உதாரணமாகக் குறிப்பிட்டனர். இதற்குப் பதிலளித்த பூஜா, “தென்னிந்திய சினிமாக்களுக்கு இடுப்புப் பகுதியின் மீது மோகம் இருப்பது உண்மைதான். ஆனால், ஒரு ஆண் எனது இடுப்பைப் பார்ப்பதை விட கால்களைப் பார்ப்பது பரவாயில்லை’ என்று தெரிவித்தார். இதை தொடர்ந்து, தென்னிந்திய சினிமாவைப் பற்றி பூஜா ஹெக்டே தவறாகப் பேசிவிட்டதாகவும், அவருக்குத் தொடர் வாய்ப்புகள் அளிக்கும் தெலுங்குத் திரைத்துறையைப் பழித்துப் பேசுவதாகவும் சிலர் விமர்சிக்கத் தொடங்கினர். இதனால் பூஜா ஹெக்டே விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: ‘நான் பேசிய விஷயங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளன. நான் சொன்னவற்றைத் திரிக்கலாம். ஆனால், தெலுங்குத் திரைத்துறை மீது எனக்கிருக்கும் அன்பைத் திரிக்க முடியாது. தெலுங்குத் திரைத்துறையே எனது உயிர் மூச்சு. எனது படங்களை விரும்பும் என் ரசிகர்களுக்குக் கூட இது தெரியும். தவறான புரிதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த அறிக்கை”. இவ்வாறு அவர் கூறியுள்ளார். அடுத்து பூஜா அகில் அக்கினேனியுடன், ‘பொம்மரில்லு’ புகழ் பாஸ்கர் இயக்கத்தில் ‘மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர்’ படங்களில் நடிக்கிறார். மேலும், பிரபாசுக்கு ஜோடியாக ‘ராதே ஷ்யாம்’ திரைப்படத்திலும் நடிக்கிறார்.