சமையல் எண்ணெய் பேக்கிங் செய்து மட்டுமே விற்க வேண்டும் – உணவு பாதுகாப்பு அதிகாரி அறிவிப்பு

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள மளிகை கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இன்று திடீரென சோதனை நடத்தினர். உணவுப் பாதுகாப்பு துறை அலுவலகத்தில் இருந்து கிளம்பிய அதிகாரிகள் நேரடியாக மேற்கு மாம்பலத்துக்குச் சென்று அங்குள்ள மளிகை கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

மளிகை கடைகளில் இருந்த சமையல் எண்ணெய் மற்றும் மற்ற எண்ணெய்களின் தரத்தை ஆய்வு செய்தனர். கடைகளில் கீழ் தளத்திலும் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் எண்ணெய்களின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் தரமற்ற சமையல் எண்ணெய் டின்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், உணவு பாதுகாப்புத் துறையின் சென்னை மண்டல நியமன அலுவலர் சதீஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், எண்ணெயை பேக்கிங் செய்து விற்பனை செய்ய தவறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சரியான முறையில் ஷவர்மா உணவு தயாரிக்கப்பட்டு இருந்தால் சாப்பிடலாம் என தெரிவித்தார்.