சப்-இன்ஸ்பெக்டரை சுட்டுக் கொன்ற மர்ம மனிதர்கள் அடையாளம் காணப்பட்டனர்!

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையை அடுத்த படந்தாலுமூடு சோதனை சாவடியில் நேற்று இரவு பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் திடீரென சுட்டுக்கொல்லப்பட்டார். இரவு 10 மணியளவில் சோதனை சாவடிக்கு குல்லா அணிந்த 2 வாலிபர்கள் சென்று பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சனுடன் தகராறு செய்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

துப்பாக்கி சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் 2 வாலிபர்களும் அங்கிருந்து தப்பி ஓடி காரில் ஏறி சென்று விட்டனர்.

இந்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பரவியது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

சோதனை சாவடி அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை அதிகாரிகள் போட்டு பார்த்து விசாரணை நடத்தினர். அப்போது குற்றவாளிகள் தப்பி ஓடும் பரபரப்பான வீடியோ காட்சிகள் சிக்கியது. அதனை கைப்பற்றி தப்பி சென்ற கொலையாளிகளை பிடிக்க தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.

சோதனை சாவடி அருகே ஒரு கார் வந்து நிற்பது கேமராவில் பதிவாகி உள்ளது. காரில் இருந்து குல்லா அணிந்த 2 பேர் இறங்கி சோதனை சாவடியை நோக்கி செல்வதும், சில வினாடிகளில் மீண்டும் காரை நோக்கி அவர்கள் ஓடி செல்வதும் பின்னர் காரில் ஏறி தப்பி செல்வதும் தெளிவாக வீடியோவில் பதிவாகி உள்ளது. இந்த காட்சிகளை வைத்து குற்றவாளிகளை பிடிக்க அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன் நேரில் சென்று விசாரணை நடத்தினார். அவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் முகாமிட்டு தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினார்.

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொன்ற கொலையாளிகள் அடையாளம் தெரிந்தது. அம்பத்தூர் சுரேஷ்குமார் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் அப்துல் சமீம் தனது கூட்டாளியான தவ்பீக் என்பவருடன் சேர்ந்து இந்த கொடூர கொலையை செய்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

நாகர்கோவிலில் பா.ஜனதா மூத்த தலைவரான எம்.ஆர்.காந்தி தாக்கப்பட்ட வழக்கிலும் அப்துல்சமீமுக்கு தொடர்பு உள்ளது. ஏர்வாடி மற்றும் புழல் சிறையில் நடந்த தாக்குதல் சம்பவங்களிலும் அப்துல்சமீமுக்கு தொடர்பு உள்ளது.

சப்-இன்ஸ்பெக்டரை அப்துல்சமீமும், அவரது நண்பரான தவ்பீக்கும் சேர்ந்தே துப்பாக்கியால் சுட்டுக் கொன்று இருக்கலாம் என்று போலீசார் உறுதிபட தெரிவித்தனர்.

பயங்கரவாதிகளான இவர்கள் 2 பேரின் புகைப்படங்களையும் போலீசார் இன்று வெளியிட்டனர்.

இந்த போட்டோக்கள் தமிழகம் முழுவதும் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூடும் இடங்களில் பயங்கரவாதிகளின் புகைப்படங்களை ஒட்டி போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

அப்துல் சமீம், தவ்பீக் இருவரும் கேரளாவுக்கு தப்பி சென்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து கேரளாவிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தை போல கேரளாவிலும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *