சசிகலாவால் அதிமுகவில் சலசலப்பு – நிர்வாகிகளுடன் ஒபிஎஸ், இபிஎஸ் ஆலோசனை

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைக்காலம் முடிந்து விடுதலை செய்யப்பட்ட சசிகலா, பெங்களூருவில் ஒரு வாரகால ஓய்வுக்கு பிறகு நாளை மறுநாள் சென்னை திரும்ப உள்ளார். அவர் தனது காரில் அதிமுக கொடியை பொருத்தியது, அதிமுகவை கைப்பற்றுவோம் எனறு டிடிவி தினகரன் கூறியது, சசிகலாவுக்கு ஆதரவாக அதிமுகவினர் சிலர் போஸ்டர் ஒட்டியது போன்ற நிகழ்வுகள் அதிமுகவில் சலசலப்பை உருவாக்கி உள்ளது.

இந்த சூழ்நிலையில், அதிமுகவின் அரசியல் வியூகம் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிப்பதற்காக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்துக்கு திடீரென ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இன்று மாலை 5 மணிக்கு மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் கலந்து கொள்ளுமாறு தொலைபேசி வாயிலாக அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

இதனால் அனைத்து மாவட்ட செயலாளர்களும் அவசரம் அவசரமாக சென்னைக்கு புறப்பட்டு வந்தனர். இன்று மாலை 5 மணியளவில் கூட்டம் தொடங்கியது. கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்று நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்கள்.

இந்த கூட்டத்தில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் மற்றும் அமைப்பு செயலாளர்களும், முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர். சசிகலா சென்னை திரும்ப உள்ள நிலையில், இந்த அவசர கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தேர்தல் நெருங்குவதால் தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்துவது குறித்து அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.