கோல்டன் குளோப் விருது விழாவில் பங்கேற்கும் அசுரன் மற்றும் சூரரைப் போற்று

ஆஸ்கார் விருதுக்கு அடுத்தபடியாக உலக அளவில் உயரிய விருதாக கருதப்படுவது கோல்டன் குளோப் விருதுகள். ஆண்டுதோறும் சிறந்த திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் விருது வெல்லும் படங்கள் மற்றும் நடிகர்களுக்கு ஆஸ்கார் விருது கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

78-வது கோல்டன் குளோப் விருது விழா அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஓ.டி.டி தளங்களில் வெளியாகும் திரைப்படங்களும் போட்டியில் பங்கேற்க தகுதி உள்ளவை என்று அறிவிக்கப்பட்டு இருந்தன.

இந்தப் போட்டிக்கு வெளிநாட்டு படங்கள் பிரிவில் திரையிட உலக அளவில் பல்வேறு மொழிகளில் இருந்து 127 படங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றில் 50 படங்கள் திரையிட தேர்வாகி இருக்கின்றன. இந்த பட்டியலில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரைப் போற்று, வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் மற்றும் மலையாள படமான ஜல்லிக்கட்டு ஆகிய படங்கள் இடம்பெற்று உள்ளன.

இது படக்குழுவினருக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சூரரைப் போற்று படம் ஓ.டி.டி தளத்தில் வெளியானது. அசுரன் படம் கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட ஏற்கனவே தேர்வாகி இருக்கிறது. ஜல்லிக்கட்டு ஆஸ்கார் விருதுக்காக இந்தியா சார்பில் போட்டியிட அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.