கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்களை பாராட்டிய கேப்டன் மோர்கன்

ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் சுற்று ஷார்ஜாவில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆர்.சி.பி. கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி, முதலில் ஆடிய பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக விராட் கோலி 39 ரன்னும், தேவ்தத் படிக்கல் 21 ரன்னும் எடுத்தனர். கொல்கத்தா அணி சார்பில் சுனில் நரைன் 4 விக்கெட்டும், பெர்குசன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்த ஆட்டத்தில் சுனில் நரைன் அதிரடியாக விளையாடினார். ஆட்டத்தில், 18-வது ஓவரை வீசிய முகமது சிராஜ், சுனில் நரைன் மற்றும் தினேஷ் கார்த்திக்கை வெளியேற்றி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இறுதியில், கொல்கத்தா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தகுதிச்சுற்று 2-க்கு முன்னேறியது. மேலும் நாளை நடைபெறும் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை கொல்கத்தா எதிர்கொள்கிறது.

ஆர்.சி.பி. அணிக்கு எதிரான வெற்றி குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் மோர்கன் கூறுகையில்  ‘‘எங்களது  வெற்றியை நரைன் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் மிக சுலபமாக்கிவிட்டார்.  தொடர்ந்து விளையாடி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  ஆட்டத் தொடக்கத்திலிருந்தே பந்து வீச்சாளர்கள் கட்டுக்கோப்பாகவே பந்துவீசினர். இலக்கை எட்டும்போது செய்யும்போதும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக் கொண்டனர்.

உலகத்தரம் வாய்ந்த நரைன், வருண் சக்ரவர்த்தி, சாஹிப் அல் ஹசன் ஆகிய 3 பேருடன் சேர்ந்து விளையாடுவது என்பது கவுரவம்தான்.  அவர்கள் மேலும் சிறப்பாக விளையாட என்னுடைய வாழ்த்துகள்.  எங்களுடைய பேட்டிங் வரிசை மிகவும் பலமானது. எங்களுடைய பேட்டிங் வரிசை பலமானதாக இருக்கிறது. தகுதிச்சுற்று 2-ல் இதே ஷார்ஜா மண்ணில் டெல்லி கேபிடல்ஸ் அணியை   எதிர்கொள்கிறோம்..

கிரிக்கெட்டைப் பொறுத்தவரை ஒவ்வொருவரும் தனது தனிப்பட்ட திறமையை வெளிகாட்டி ரசிகர்களை வியக்கும்படி செய்கின்றனர். அதில், நரைன் தனது தனிப்பட்ட திறமைகளை சற்று கூடுதலாக  காட்டுவார். அவர் சிறப்பான வீரர்’’ என்றார்.