கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்காத படக்குழு – ஆவேசமடைந்த டாம் குரூஸ்

உலகம் முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளோடு சினிமா படப்பிடிப்புகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் தற்போது மிஷன் இம்பாஸிபில் 7 படத்தில் நடித்து வருகிறார். லண்டனில் தனி கிராமத்தை உருவாக்கி இதன் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் படப்பிடிப்பில் பங்கேற்ற சிலர் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாக கூடி நின்றனர். அதை பார்த்த டாம் குரூஸ் ஆவேசமானார். அவர்களை கடுமையாக திட்டினார். அந்த ஆடியோ தற்போது கசிந்து வைரலாகி வருகிறது.

அதில், “கொரோனா விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் படப்பிடிப்பில் இருந்து விரட்டப்படுவார்கள். சினிமா துறை முடங்கியதால் வேலை இழந்து இருப்பவர்களிடம் பேசி பாருங்கள். அப்போது கஷ்டம் புரியும். சாப்பாடு இல்லாமல் கல்வி கட்டணம் செலுத்த முடியாத நிலையில் உள்ளனர்.

தினமும் தூங்க போகும்போது அதை நினைத்து பார்க்கிறேன். உங்கள் அஜாக்கிரதையால் படப்பிடிப்பை நிறுத்த முடியாது. படப்பிடிப்பு தளத்தில் கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்” என்று பேசி உள்ளார். கொரோனா விதிமுறையை கடைப்பிடிக்காத 5 பேர் படப்பிடிப்பில் இருந்து வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.