கொரோனாவால் தனுஷின் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பு ஒத்தி வைப்பு

நடிகர் தனுஷ் ஏற்கனவே ‘எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் தி பகீர்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். தற்போது ‘தி கிரே மேன்’ என்ற பெயரில் தயாராகும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான கிறிஸ் ஈவான்ஸ் மற்றும் லா லா லேண்ட், பர்ஸ்ட்மேன் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த ரயன் காஸ்லிங் ஆகியோரும் நடிக்கின்றனர்.

அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட்கேம், கேப்டன் அமெரிக்கா விண்டர் சோல்ஜர், சிவில் வார் போன்ற படங்களை இயக்கிய அந்தோனி, ஜோ ரூஸோ ஆகியோர் இப்படத்தை இயக்குகிறார்கள். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்காக தனுஷ் டுவிட்டரில் மகிழ்ச்சி தெரிவித்து இருந்தார்.

அவருக்கு நடிகர்கள் மற்றும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்தனர். ‘தி கிரே மேன்’ படத்தின் படப்பிடிப்பை அமெரிக்காவில் அடுத்த மாதம் தொடங்குவதாக இருந்தனர். ஆனால் கலிபோர்னியா மாகாணத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து உள்ளதால் படப்பிடிப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.