கொரோனாவால் அதிகம் மரணம் நிகழ்ந்த மாநிலங்கள் – புதுச்சேரிக்கு 3 வது இடம்

புதுவையில் கொரோனா 2-வது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது.

முதல் அலையின் தாக்கத்துக்கு பிறகு தொற்று பரவலே இல்லாத நிலையில் புதுவை இருந்தது. நாடு முழுவதும் 2-வது அலை பரவ தொடங்கிய காலகட்டத்தில் புதுவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.

இரட்டை இலக்க எண்ணில் இருந்து மாறி 3 இலக்க எண்ணை அடைந்து தற்போது 4 இலக்கு எண்ணிக்கையை தொற்று எட்டியுள்ளது. நாள்தோறும் சுமார் 2 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையால் அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவ கனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகிறது. ஆக்சிஜன் படுக்கைகள், சிகிச்சை பெறும் படுக்கைகளை உயர்த்தியும் தட்டுப்பாடு நிலவுகிறது.

12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீட்டு தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். நோயாளிகள் வெளியே நடமாடுவதை தடுக்க கட்டுப்பாட்டு மண்டலம், கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. புதுவையில் நாள்தோறும் மரணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

கடந்த 4-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை 7 நாட்களில் 140 பேர் கொரோனாவுக்கு மாநிலம் முழுவதும் பலியாகியுள்ளனர். 9-ந்தேதி உச்சபட்சமாக ஒரே நாளில் 26 பேர் பலியாகினர்.

மத்திய அரசின் சுகாதாரத்துறை நாடு முழுவதும் கொரோனாவால் மரணமடைந்தவர்கள் குறித்து நேற்று ஒரு புள்ளி விபரத்தை வெளியிட்டது. இதில் மக்கள் தொகையின் அடிப்படையில் இறப்பு விகிதம் கணக்கிடப்பட்டு மாநிலங்களை வரிசைபடுத்தி உள்ளனர்.

இதில் புதுவை 3-வது இடத்தை பிடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 12 லட்சம் மக்கள் தொகை கொண்ட புதுவையில் இதுவரை 965 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். ஒரு லட்சம் பேருக்கு 80 பேர் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுவைக்கு முன்பாக டெல்லி முதலிடத்தையும், கோவா 2-வது இடத்தையும் பிடித்துள்ளது. சிறிய மாநிலமான புதுவையில் இறப்பு விகிதம் அதிகரித்திருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என தொடர்ந்து பொதுமக்களுக்கு அரசு அறிவுறுத்தி வருகிறது. தெருவுக்கு தலா 4 வீடுகளை சேர்ந்தோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவல் அதிகரிப்பு, இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு பீதியால் புதுவையில் பொதுமக்கள் நடமாட்டமும் வெகுவாக குறைந்து வருகிறது.