கே.எல்.ராகுல் ரன் அவுட் – பெருந்தன்மையாக நடந்துக் கொண்ட மும்பை அணி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றுமுன்தினம் மும்பை இந்தியன்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் விக்கெட்டை இழந்தபின் கிறிஸ் கெய்ல், கே.எல். ராகுல் ஆகியோர் பேட்டிங் செய்து கொண்டிருந்தனர்.

குருணல் பாண்ட்யா வீசிய பந்தை நேராக அடித்தார் கிறிஸ் கெய்ல். பந்து கே.எல். ராகுலை நோக்கி வந்தது. பந்து தன்மீது படாமல் இருக்க கால்களை தூக்கினார். அப்போது எதிர்பாராத விதமான பந்து கே.எல். ராகுல் காலில் பட்டு குருணல் பாண்ட்யாவிடம் சென்றது.

நொடிப்பொழிதில் பந்தை பிடித்து ஸ்டம்பை தகர்த்தார் குருணல் பாண்ட்யா, அத்துடன் நடுவரிடம் ரன்அவுட்டுக்கு முறையீடு செய்தார். நடுவரும் சைகை மூலம் 3-வது நடுவரிடம் ரீபிளே காட்ட தெரிவித்தார். உடனடியாக குருணல் பாண்ட்யா, ரன்அவுட் முறையீட்டை திரும்ப பெறுகிறேன். அவுட் கொடுக்க வேண்டாம் என்றார். மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மாவும் முறையீடு வேண்டாம் எனக் கூறினார்.

இதனால் கே.எல். ராகுல் ரன்அவுட்டில் இருந்து தப்பினார். ஆனால் தொடர்ந்து விளையாடிய அவர் நீண்ட நேரம் களத்தில் நின்று விளையாட முடியாமல் ஆட்டமிழந்தார்.

குருணல் பாண்ட்யா, ரோகித் சர்மாவின் பெருந்தன்மையை இணையதளவாசிகள் பாராட்டி வருகின்றனர். இதுதான் ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் என்கின்றனர்.