கேரளாவில் மேலும் 3 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு!

கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று 2-வது அலை பரவல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. சில மாவட்டங்களில் அதிக அளவு பாதிப்பு உள்ளது.

நேற்று ஒரே நாளில் 1,55,543 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 29,701 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மேலும் 24 மணி நேரத்தில் 74 பேர் மரணம் அடைந்து உள்ளனர். இதனால் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 21, 496 ஆக அதிகரித்து உள்ளது.

கொரோனா தொற்று பரவல் குறையாத நிலையில் கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது பொதுமக்கள் இடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே சேத்தமங்கலம், பலூர் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் நிபா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோழிக்கோடு மருத்துவமனையில் நேற்று அதிகாலை பலியானான்.

நிபாவுக்கு பலியான சிறுவன் கடந்த ஆகஸ்டு 31-ந் தேதி வழக்கத்துக்கு மாறான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான்.

தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகள் என 5 இடங்களில் சிகிச்சை பெற்றும் பலனின்றி நேற்று அதிகாலை கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிறுவன் பலியானான். பலியான சிறுவனின் உடல் நேற்று 12 அடி ஆழத்தில் குழிதோண்டி அடக்கம் செய்யப்பட்டது.

மேலும் சிறுவனின் வீடு இருக்கும் பகுதியில் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி மற்றும் தனி யார் ஆஸ்பத்திரிகளில் நிபா வைரசுக்கு பலியான சிறுவனுக்கு சிகிச்சை அளித்த சுகாதார பணியாளர்கள் 17 பேருக்கும், சிறுவனின் பெற்றோருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

அவர்களின் ரத்த மாதிரிகள் மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள வைரலாஜி பரிசோதனை நிறுவனத்தில் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சிறுவனின் தாய் மற்றும் சிகிச்சை அளித்த 2 பேருக்கு நிபா அறிகுறி இருப்பது உறுதியானது. அவர்கள் கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் நிபாவுக்கு பலியான சிறுவனுடன் நேரடி மற்றும் மறைமுக தொடர்பில் இருந்த உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர், மருத்துவ பணியாளர்கள் 188 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்கள் கேரள சுகாதார துறை மருத்துவ நிபுணர்களின் நேரடி கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இதில் 20 பேருக்கு அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டது.

அவர்கள் கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சிறுவனின் தாய் மற்றும் 2 மருத்துவ பணியாளர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது தொடர்பாக கேரள சுகாதாரத்துறை மந்திரி வீனா ஜார்ஜ் கூறியதாவது:-

பொதுமக்கள் நிபா வைரஸ்  குறித்து பயப்பட தேவையில்லை. ஆனால் அரசின் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று கூறினார்.

இதற்கிடையில் வழக்கத்துக்கு மாறான காய்ச்சல் அறிகுறிகள் மற்றும் மரணம் ஏற்பட்டால் அது குறித்து கேரள சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.