கேரளாவில் இருந்து கோவை மாவட்டத்திற்குள் நுழைய கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன

கோவை மாவட்டத்தில் கடந்த மே மாதத்தில் உச்சத்தில் இருந்த கொரோனா தொற்று அதன்பின்னர் மாவட்ட நிர்வாகம் எடுத்த பல்வேறு தீவிர தடுப்பு நடவடிக்கை காரணமாக குறைந்து வந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் முதல் கோவையில் மீண்டும் தொற்று பரவல் மெல்ல உயர தொடங்கியது. 140-க்கும் கீழே சென்ற பாதிப்பு திடீரென 160, 170 என உயர்ந்து 240-யை தொட்டது.

திடீரென தொற்று பாதிப்பு உயர தொடங்கியதை அடுத்து மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று முதல் கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இன்று முதல் கோவையில் பால், மருந்தகங்கள், தனியாக செயல்படும் காய்கறி கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் காலை 10 மணி முதல் 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பால், மருந்தகங்கள், காய்கறிகள் கடைகள் மட்டும் அதிகாலையிலேயே திறக்கப்பட்டன. மற்ற கடைகள் அனைத்தும் 10 மணிக்கு திறக்கப்பட்டு 5 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். அதன்பின்னர் கடைகள் மூடப்படும்.

கடைகளுக்கு வருபவர்களை கடை உரிமையாளர்கள் முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தினர்.

மாவட்டத்தில் உள்ள மார்க்கெட்டுகளில் சில்லரை விற்பனை நிறுத்தப்பட்டு, மொத்த விற்பனை மட்டுமே நடைபெற்றது. விவசாயிகள் கொண்டு வந்த பொருட்களை வியாபாரிகள் வாகனங்கள் மூலம் எடுத்து சென்றனர். மார்க்கெட்டுகளிலும் அடிக்கடி கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. அங்கு வந்த அனைவரும் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்தனர்.

கோவையில் திடீரென தொற்று அதிகரித்ததாலும், அண்டை மாநிலமான கேரளாவில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளதாலும் இன்று முதல் கேரளா, கர்நாடகா உள்பட வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும். அல்லது 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே கோவைக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இதையடுத்து மாவட்டத்தில் உள்ள வாளையார், கோப்பனாரி, மீனாட்சிபுரம், கோபாலபுரம், நடுப்புணி, செம்மணாம்பதி உள்பட அனைத்து எல்லைகளிலும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டது. அங்கு போலீசார், சுகாதாரத்துறையினர், வருவாய்த் துறையினர், உள்ளாட்சி துறையினர் உள்பட பல்வேறு துறையினர் இணைந்து கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.

அந்த வழியாக கோவைக்குள் வந்த வாகனங்கள் அனைத்தையும் தடுத்து நிறுத்தி தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். வாகனங்களில் வந்தவர்களிடம் கொரோனா பரிசோதனை சான்று அல்லது தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று, இ-பதிவு செய்துள்ளனரா? என ஆய்வு செய்தனர். இ-பதிவு பெறாதவர்களுக்காக அங்கேயே தனி அலுவலகம் அமைத்துள்ளனர். அங்கு வைத்து அவர்களுக்கு இ-பதிவு செய்யப்படுகிறது.

மேலும் கொரோனா பரிசோதனை செய்யாதவர்களுக்காக அங்கு சுகாதாரத்துறை மூலம் சிறப்பு மருத்துவ முகாமும் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு கேரளாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

முடிவுகள் வரும் வரை எங்கும் செல்லாமல் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி கோவைக்குள் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவர்களை தீவிரமாக கண்காணித்தனர்.

போலீசார் மற்றும் சுகாதாரத்துறையின் தீவிர சோதனையால் வாளையார் சோதனை சாவடியில் லாரிகள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நிற்கின்றன.

தமிழக -கேரள எல்லையான காரமடை அடுத்த தோலம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கோப்பனாரியில் போலீசார் சோதனைச்சாவடி அமைத்துள்ளனர். இங்கு கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி ஆய்வு செய்தனர். அப்போது 2 டோஸ் தடுப்பூசிஅல்லது 72 மணி நேரத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ் வைத்துள்ளனரா? என சோதிக்கின்றனர். மேலும் கோவைக்கு வருவதற்கு இ-பதிவு பெற்றிருக்கிறார்களா? என்பதையும் ஆய்வு செய்கின்றனர்.

அப்படி எதுவும் இல்லாமல் வரும் வாகனங்களையும், பயணிகளையும் எல்லையிலேயே திருப்பி அனுப்பினர். அதேபோன்று மேட்டுப்பாளையத்திலிருந்து கேரளாவுக்கு செல்லும் வாகனங்களுக்கும் இதே விதிமுறைகளை போலீசார் கடைபிடிக்கின்றனர்.

கோவையில் இருந்து கேரளாவுக்கு லாரிகள் மூலம் தினமும் கத்திரிக்காய், உருளை உள்பட பல்வேறு காய்கறிகள் கொண்டு செல்லப்படுகிறது. தற்போது கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தியுள்ளதை அடுத்து அந்த வாகனங்களுக்கும் எல்லையில் வைத்து கிருமி நாசினி தெளிக்கின்றனர். இதேபோன்று கோவையில் இருந்து கேரளா செல்லும் வாகனங்களும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.