‘கில்லி’ பட புகழ் நடிகர் மாறன் கொரோனவால் பலி

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நத்தம் பகுதியில் வசித்து வந்தவர் திரைப்பட துணை நடிகர் மாறன். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், நடிகர் மாறன் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவருக்கு வயது 48. 2004-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான கில்லி படத்தில் ஆதிவாசி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான இவர், இதையடுத்து டிஷ்யூம், பட்டாசு, தலைநகரம், வேட்டைக்காரன், கேஜிஎஃப் உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். மேலும் கானா பாடல்களையும், மேடை கச்சேரிகளிலும் பாடி வந்துள்ளார்.

சமீபத்தில் கொரோனா தொற்றுக்கு நடிகர் பாண்டு, இயக்குனர்கள் கே.வி.ஆனந்த், தாமிரா, பாடகர் கோமகன், நடிகர் ஜோக்கர் துளசி ஆகியோர் மரணம் அடைந்த நிலையில், தற்போது நடிகர் மாறனும் மரணமடைந்திருப்பது திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.