Tamilசெய்திகள்

காஷ்மீர் விவகாரத்தில் டிரம்பின் உதவியை நாடிய பிரதமர் மோடி? – மத்திய அரசு விளக்கம்

அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்யும்படி இந்திய பிரதமர் மோடி கேட்டதாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

“இரண்டு வாரங்களுக்கு முன் ஜப்பானில் இந்திய பிரதமர் மோடியை சந்தித்தபோது காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய விருப்பமா? என்று கேட்டார். அப்போது இந்தியாவும் பாகிஸ்தானும் கேட்டுக்கொண்டால் மத்தியஸ்தம் செய்ய தயாராக உள்ளதாக கூறினேன்” என டிரம்ப் குறிப்பிட்டார்.

ஆனால் அப்படி எந்த கோரிக்கையையும் டிரம்பிடம் பிரதமர் மோடி வைக்கவில்லை என இந்தியா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

அமெரிக்க அதிபர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியை பார்த்தேன். இந்தியாவும் பாகிஸ்தானும் கேட்டுக்கொண்டால், காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக டிரம்ப் கூறியிருக்கிறார். அமெரிக்க அதிபரிடம் பிரதமர் மோடி அப்படி எந்த கோரிக்கையையும் முன்வைக்கவில்லை.

பாகிஸ்தானுடன் உள்ள பிரச்சினைகளை இரு நாடுகளும் தங்களுக்குள் மட்டுமே பேசி தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது. சிம்லா ஒப்பந்தம் மற்றும் லாகூர் பிரகடனத்தின் அடிப்படையிலேயே பிரச்சினைக்கு தீர்வு இருக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *