Tamilசெய்திகள்

காற்றாலை, சூரிய ஒளி மூலம் 48 சதவீதம் மின்சாரம் தயாரிப்பு!

தமிழ்நாட்டில் உள்ள அணைகளில் தண்ணீர் இருப்பு வெகுவாக குறைந்து விட்டதால் நீர்மின் நிலையம் மூலம் மின்சாரம் உற்பத்தி கிடைக்கவில்லை.

அனல் மின்நிலையம் மற்றும் கூடங்குளம் அணுமின் நிலையம் மூலம் தான் மின்சாரம் கிடைத்து வருகிறது. இதுதவிர காற்றாலை மின் உற்பத்தி மற்றும் சோலார் பேனல் (சூரிய மின் உற்பத்தி) மூலமும் மின்சாரம் கிடைக்கிறது. தமிழகத்துக்கு தினமும் 13 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது.

இப்போது தென்மேற்கு பருவமழை காலம் என்பதால் மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டிய பகுதிகளில் காற்று அதிகம் வீசுகிறது.

இதனால் கயத்தாறு, ஆரல்வாய்மொழி, முப்பந்தல் உள்பட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலை மூலம் மின் உற்பத்தி அதிகம் கிடைத்து வருகிறது.

நேற்று ஒரு நாளில் மட்டும் காற்றாலை மூலம் 3914 மெகாவாட் மின்சாரம் கிடைத்துள்ளது. சூரிய ஒளி மூலம் (சோலார் பேனல்) 1917 மெகாவாட் மின் உற்பத்தி வந்துள்ளது. இது மொத்த மின் உற்பத்தியில் 48 சதவீதம் ஆகும்.

இதுகுறித்து மின் வாரிய அதிகாரி கூறுகையில், “நீர்மின் நிலையங்கள் மூலம் நமக்கு மின்சாரம் கிடைக்காத இந்த சூழலில் காற்றாலை மூலம் மின் உற்பத்தி அதிகம் கிடைப்பது மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

காலை 11 மணி முதல் மாலை 3 மணிக்குள் அதிகபட்ச மின் உற்பத்தி கிடைத்து விடுகிறது. இதேபோல் சோலார் மின் உற்பத்தியும் நாளுக்கு நாள் அதிகம் கிடைத்து வருகிறது.

இப்போது சோலார் மின் உற்பத்தி நிறைய வீடுகளில் இருந்தும் கிடைத்து வருகிறது. நாளடைவில் சோலார் மின் உற்பத்தி மேலும் அதிகரிக்கும் அந்த அளவுக்கு மக்கள் விரும்பி வீடுகளில் சோலார் பேனல் அமைத்து வருகிறார்கள்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *