காதல் விவகாரம்! – மாணவியின் கழுத்தை அறுத்த தந்தை

பெரியபாளையம் அருகே உள்ள பூரிவாக்கத்தை சேர்ந்தவர் ஜெகன். தனியார் நிறுவன ஊழியர். இவர் வேலை சம்பந்தமாக சென்னைக்கு வந்தபோது, கோயம்பேட்டை சேர்ந்த 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது.

அந்த சிறுமி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். நாளடைவில் இது காதலாக மாறியது. கடந்த ஜனவரி மாதம் இருவரும் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தனர்.

இதுகுறித்து மாணவியின் தந்தை கோயம்பேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜெகனை கைது செய்து அடைத்தனர். பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

இந்த நிலையில் ஜெகனுக்கு பிறந்தநாள் என்று தெரிகிறது. இதையடுத்து காதலனை சந்திப்பதற்காக மாணவி, பூரிவாக்கம் கிராமத்துக்கு வந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெகனின் உறவினர்கள் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த மாணவியின் தந்தை அங்கு வந்த மகளை கண்டித்தார். அப்போது மாணவி, தனது காதலனை விட்டு பிரிந்து வர முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். கோபம் அடைந்த மாணவியின் தந்தை திடீரென மகளின் கழுத்தை கத்தியால் அறுத்தார்.

இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உடனடியாக அவரை மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரியபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.