கழன்று ஓடிய எஸ்க்பிரஸ் ரயில் பெட்டி – மும்பையில் பரபரப்பு

மராட்டிய மாநிலம் மும்பை சி.எஸ்.எம்.டி.- நாசிக் மாவட்டம் மன்மாடு இடையே பஞ்சவதி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை இந்த ரெயில் மும்பை நோக்கி வந்து கொண்டிருந்தது. ரெயிலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அந்த ரெயில் காலை 9.55 மணியளவில் கல்யாண்-தாக்குர்லி இடையே வேகமாக வந்தபோது, என்ஜினில் இருந்த 3-வது மற்றும் 4-வது பெட்டிகளின் இணைப்பு திடீரென விடுபட்டது. இதன் காரணமாக அந்த ரெயிலின் என்ஜின் 3 பெட்டிகளுடன் தனியாக பிரிந்து சென்றது.

ரெயிலின் மற்ற 19 பெட்டிகள் மெதுவாக ஓடி நடுவழியில் நின்றன. இதை பார்த்து பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக ரெயில் பெட்டிகள் எதுவும் தடம் புரளவில்லை. இதனால் பயணிகள் உயிர்தப்பினர். என்ஜின் டிரைவரும் ரெயில் பெட்டிகள் கழன்றதை அறிந்தார். உடனடியாக அவர் ரெயிலை நிறுத்தினார். மேலும் இதுபற்றி ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

இதற்கிடையே நடுவழியில் நின்ற ரெயில் பெட்டிகளில் இருந்த பயணிகள் பதற்றத்துடன் கீழே இறங்கி நின்று கொண்டிருந்தனர். பின்னர் அவர்கள் மின்சார ரெயில்களில் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். ரெயிலில் இருந்து தனியாக பிரிந்த பெட்டிகள் நடுவழியில் நின்றதால் மும்பை நோக்கி வரும் விரைவு வழித்தடத்தில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *