கமல்ஹாசனின் இன்றைய நிகழ்ச்சிகள் திடீர் ரத்து!

நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் இன்று பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அவர் காலை 11 மணிக்கு தூத்துக்குடியிலும், பிற்பகலில் நெல்லை, பாளை பகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்தும் பிரசாரம் செய்துவிட்டு மாலை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் கமல்ஹாசனின் இன்றைய தென்மாவட்ட நிகழ்ச்சிகள் திடீரென்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளிடம் கேட்டபோது கூறியதாவது:-

கமல்ஹாசன் நேற்று மதுரை மாவட்டத்திற்குட்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அவனியாபுரம், பெத்தானியாபுரம், ஆரப்பாளையம் குறுக்கு சாலை, கோ.புதூர் பஸ் நிலையம், தெப்பக்குளம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.

அதனை தொடர்ந்து இன்று தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர் இன்று கோவை தொகுதியில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். இதனால் அவரது இன்றைய தென் மாவட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர் தென் மாவட்டங்களில் பிரசாரம் செய்யும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.