கனிமொழியை எதிர்த்து தமிழிசை போட்டியா? – பொன்.ராதாகிருஷ்ணன் பதில்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தரிசனம் செய்தார். பின்னர் அவர், கோவில் விருந்தினர் மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்துக்கு ஏராளமான நலத்திட்டங்களை வழங்கி உள்ளார். மத்திய பா.ஜனதா அரசின் சார்பில் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டதால் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
தூத்துக்குடியில் என்.எல்.சி. சார்பில் 1,000 மெகாவாட் அனல்மின் நிலையம், நெல்லையில் 150 மெகாவாட் சோலார் மின்உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு உள்ளன. சென்னை-கொல்லம் இடையே தினசரி ரெயில் சேவை தொடங்கப்பட்டு உள்ளது. தாம்பரம்-நெல்லை இடையே இயக்கப்பட்ட அந்தியோதயா ரெயில் நாகர்கோவில் வரையிலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. தர்மபுரி-பெரம்பூர் இடையே ரெயில் சேவை தொடங்கப்பட்டு உள்ளது.
அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க.வும் இடம்பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. அதுகுறித்து வருகிற 6-ந்தேதிக்குள் தெரிந்து விடும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் எங்களது கூட்டணி புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி முதலில் அவரது மாநிலத்தில் நன்றாக ஆட்சி செய்யட்டும். பின்னர் அவர் மத்திய அரசை பற்றி குறை கூறட்டும். தூத்துக்குடி மாவட்டத்தை விட சிறிய பகுதியான புதுச்சேரி மாநிலத்தில் அவர்கள் என்ன சாதித்தார்கள்?
இவ்வாறு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
தொடர்ந்து அவரிடம், தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியை எதிர்த்து தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறாரா? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு பொன்.ராதாகிருஷ்ணன், ‘‘தூத்துக்குடியில் தி.மு.க. வேட்பாளராக கனிமொழி எம்.பி. போட்டியிடுவதாகவும், அவரை எதிர்த்து பா.ஜனதாவில் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுவதாகவும் பத்திரிகையாளர்கள்தான் கூறி வருகின்றனர். கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடும்போதுதான் அதை பற்றி உறுதியாக தெரியவரும்’’ என்றார்.