கட்சி மாறினால் வீடு புகுந்து வெட்டுவேன் – மிரட்டல் விடுத்த அதிமுக நிர்வாகி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நகராட்சி தேர்தலுக்கான அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சாத்தூர் ஒன்றிய செயலாளர் சண்முகக்கனி பங்கேற்றார்.

அவர் கட்சியினர் மத்தியில் பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதற்கு காரணம் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று விட்டு கட்சி மாறினால் அவர்களை வீடு புகுந்து வெட்டுவேன் என சண்முகக்கனி பேசி இருப்பது தான்.

அந்த வீடியோவில், ‘உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின் யாராவது கட்சி மாறினால் வீடு தேடி வந்து வெட்டுவேன். அவர்கள் போஸ்ட்மார்ட்டம் ஜி.ஹெச்சில்தான் நடைபெறும். மாவட்ட செயலாளரிடம் சொல்லிவிட்டு வந்து வெட்டுவேன்’ என சண்முகக்கனி பேசி இருக்கிறார்.

இந்த கூட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகளும் பங்கேற்றிருந்தனர். இது குறித்து சாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து சண்முகக்கனி மீது கொலை மிரட்டல் 506 (1), ஆயுதங்களை பயன்படுத்தி மிரட்டும் வகையில் பேசுவது 505 (1பி), இரு பிரிவினரிடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசியது 153 (ஏ) ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.