கடன் வாங்கிவிட்டு வெளிநாடுகளுக்கு ஓடியவர்களை சும்மா விட மாட்டோம் – அமைச்சர் நிர்மலா சீதாராமன்

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் காஷ்மீருக்கு சென்றார். முதலில், ஸ்ரீநகரில் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, நேற்று ஜம்மு நகருக்கு சென்றார்.

அங்கு பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார். கடன் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில், நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-

கடந்த 2014-ம் ஆண்டு, மோடி அரசு பதவிக்கு வந்தபோது வாராக்கடன் கவலைக்குரிய அம்சமாக இருந்தது. வாராக்கடனை மீட்பதற்கு நாங்கள் மேற்கொண்ட முயற்சிகள் நல்ல பலன்களை தந்தன.

வங்கியில் கடன் பெற்று விட்டு அதை திருப்பிச் செலுத்தாதவர்களை துரத்தினோம். அவர்கள் இந்தியாவில் இருந்தாலும், வெளிநாட்டுக்கு தப்பி ஓடி இருந்தாலும் விடவில்லை. அவர்களது சொத்துகள் முடக்கப்பட்டன. அவை சட்டரீதியாக விற்கப்பட்டோ, ஏலம் விடப்பட்டோ கிடைத்த பணத்தை வங்கியிடமே திருப்பி ஒப்படைத்தோம்.

இந்த பணி தொடர்ந்து நடைபெறும். வங்கியில் இருந்து பெறப்பட்ட பணத்தை வங்கியிடம் மீண்டும் சேர்க்க வைப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்கு அளித்த கூறியதாவது:-

வங்கிக்கடனை திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பி ஓடியவர்களை சும்மா விட மாட்டோம். அவர்களின் சொத்துகளை கோர்ட்டு மூலம் பெற்று, வங்கிகளிடம் ஒப்படைப்போம்.

விஜய் மல்லையா, நிரவ் மோடி மட்டுமின்றி மேலும் பல மோசடியாளர்களும் உள்ளனர். கடனாக கொடுத்த பணம், அந்தந்த வங்கிகளுக்கு திரும்ப செலுத்தப்பட்டு வருகிறது.

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு காஷ்மீர் வேகமான வளர்ச்சி கண்டுள்ளது. அனைத்து மத்திய அரசு திட்டங்களும் காஷ்மீர் மக்களுக்கு கிடைக்கும்.

வேறு மாநிலத்தினர் இங்கு தொழிற்சாலைகள் அமைக்க காஷ்மீர் மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.