கங்கை நதியில் குளித்த 4 பேர் நீரில் மூழ்கி பலி!

உத்தரபிரதேச மாநிலம் பதோஹி மாவட்டத்தில் உள்ள கங்கை நதியில் 3 சிறுவர்கள் உள்பட 7 பேர் குளிக்கச் சென்றுள்ளனர்.

கோபிகஞ்ச் போலீஸ் வட்டத்தில் உள்ள பிரோஸ்பூர் கங்கா காட் என்ற இடத்தில், கவுலாப்பூர் பகுதியை சேர்ந்த 7 பேரும் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது.

அப்போது, இளைஞர்கள் நீரில் மூழ்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பெண்கள் தங்களது நீண்ட சேலைகளை கொடுத்து மூன்று பேரை மீட்டுள்ளனர்.

மேலும், 4 பேர் நீரில் மூழ்கினர். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த மாவட்ட மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் மேற்பார்வையில் மீட்புப் பணி நடைபெற்றது.

இந்நிலையில், கங்கை நதியில் மூழ்கிய 4 பேரையும் சடலமாக மீட்டனர்.

இறந்தவர்களில் பிரபாத் மிஸ்ரா (24), அங்கித் குமார் சதூர்வேதி (19), பிரவேஷ் மிஸ்ரா (19) மற்றும் லக்கி மிஸ்ரா (15) ஆகியோர் என அடையாளம் காணப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.