ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்து கூறிய விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி உலகின் தலைசிறந்த கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் திகழ்ந்து வருகிறார். கிரிக்கெட் போட்டியில் எப்பொழுதுமே தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.

இவர் தலைமையில் இந்திய அணி முக்கியமான கோப்பைகளை வென்றதில்லை என்றாலும் ஒரு துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும். ஐ.சி.சி.-யின் 50 ஓவர் சாம்பியன்ஷிப், 50 ஓவர் உலகக்கோப்பை, ஐ.சி.சி.-யின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில் வெற்றிபெற முடியாமல் இந்தியா ஏமாற்றம் அடைந்துள்ளது.

இருந்தாலும் நாங்கள் வெற்றிக்காக விளையாடினோம். கிரிக்கெட்டில் வெற்றி அல்லது தோல்வி என்பது சகஜமானது. இதை மறந்து அடுத்த போட்டிக்கு முன்னேறுவோம் எனக் கூறுவார்.

டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா சார்பில் 120 பேர் (இரண்டு ஹாக்கி அணி வீரர்- வீராங்கனைகள் உள்பட) கலந்து கொண்டனர். ஆண்கள் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது. நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் மீராபாய் சானு மற்றும் ரவிக்குமார் தாஹியா வெள்ளிப்பதக்கம் பிவி சிந்து, லவ்லினா, பஜ்ரங் புனியா ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.

துப்பாக்கிச்சுடுதல், வில்வித்தை, டேபிள் டென்னிஸ் போன்ற போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு பாராட்டு தெரிவித்து விராட் கோலி டுவிட்டரில் செய்தி பதிவிட்டுள்ளார்.

அந்த டுவிட்டர் பதிவில் ‘‘ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்கள் மற்றும் கலந்து கொண்டவர்கள் என அனைவருக்கும் வாழ்த்துக்கள். வெற்றி மற்றும் தோல்வி விளையாட்டின் ஒரு பகுதி. ஆனால், நாட்டிற்காக உங்களுடைய சிறந்த பங்களிப்பை எந்த அளவிற்கு கொடுத்தீர்கள் என்பதுதான் விசயம். உங்களால் நாங்கள் பெருமை அடைகிறோம். சிறந்த முறையில் முன்னோக்கிச் செல்ல வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். ஜெய் ஹிந்த்’’ எனப் பதிவிட்டுள்ளார்.