ஒரே ஷாட்டில் படமாக்கப்படும் திகில் படத்தில் நடிக்கும் விமல்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விமல். இவர் நடிப்பில் தற்போது கன்னிராசி திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், இவர் அடுத்ததாக ஹாரர் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார்.

கழுகு 2 படத்தை தொடர்ந்து மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சார்பில் சிங்கார வடிவேலன் தயாரிக்கும் புதிய ஹாரர் படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்கிறார். மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. “1 பந்து 4 ரன் 1 விக்கெட்” பட இயக்குனர் வீரா இந்த படத்தை இயக்குகிறார். இதில் ஹைலைட்டான அம்சம் என்னவென்றால் இந்தப்படம் ஒரே ஷாட்டில் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நடைபெற்று முடிந்த தயாரிப்பாளர் சங்க தேர்தலில், துணைத்தலைவர் பதவிக்கு தயாரிப்பாளர் சிங்கார வடிவேலன் போட்டியிட்டபோது, அவருக்கு உறுதுணையாக, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டவர் இயக்குனர் வீரா. இதனால் அவரை கவுரவப்படுத்தும் விதமாக, நன்றிக்கடனாக இந்த பட வாய்ப்பை, அவருக்கு வழங்கியுள்ளார் சிங்காரவடிவேலன். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் சென்னையில் துவங்குகிறது.