ஒரே நேரத்தில் இரண்டு அணிகளை களம் இறக்க பிசிசிஐ முடிவு!
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் மத்தியில் இருந்து உலகம் முழுவதும் விளையாட்டு போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. பல சர்வதேச போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் இருக்கின்றன. இதில் சர்வதேச கிரிக்கெட் போட்டியும் அடங்கும். இதனால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களுக்கு பெருத்த வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா பிரச்சினை ஓய்ந்ததும் ரசிகர்கள் இன்றி பூட்டிய மைதானத்தில் கூட போட்டியை நடந்த கிரிக்கெட் வாரியங்கள் தயாராகி வருகின்றன.
கடந்த மார்ச் மாதம் 29-ந் தேதி தொடங்க வேண்டிய ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டு இருப்பது இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு பெரிய தலைவலியாக உள்ளது. இந்த போட்டி ரத்து செய்யப்பட்டால் சுமார் ரூ.4000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இந்திய கிரிக்கெட் வாரியம், போட்டி ஒளிபரப்பு நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பு ஏற்படும்.
கொரோனா வைரஸ் தாக்கம் தணிந்து மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் தொடங்கும் போது, ஏற்கனவே ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய எல்லா அணிகளும் அதிக ஆட்டங்களில் விளையாட வேண்டிய நெருக்கடி நிச்சயம் ஏற்படும். அப்போது ஒரே சமயத்தில் டெஸ்ட் மற்றும் குறுகிய வடிவிலான (ஒருநாள், 20 ஓவர்) கிரிக்கெட் போட்டியில் விளையாட வேண்டிய அவசியம் அணிகளுக்கு நேரிடலாம். எனவே ஒவ்வொரு நாடும் டெஸ்ட் மற்றும் குறுகிய வடிவிலான போட்டிக்கு தனித்தனியாக அணியை உருவாக்க வேண்டிய நிலை உருவாகலாம். இதனை கருத்தில் கொண்டு இந்திய கிரிக்கெட் வாரியம் ஒரேநேரத்தில் இரண்டு வடிவிலான போட்டிகளில் விளையாட 2 அணிகளை உருவாக்குவது குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. 2 அணிகள் ஏற்படுத்துவதன் மூலம் இந்திய அணி அதிக போட்டிகளில் விளையாட முடிவதுடன், குறுகிய காலத்தில் அதிக வருவாயையும் ஈட்ட முடியும்.
இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், ‘சர்வதேச கிரிக்கெட் போட்டி மீண்டும் எப்போது தொடங்கும் என்பது யாருக்கு தெரியும். ஆனாலும் ஸ்பான்சர் முதல் பார்வையாளர்கள் வரை எங்களுடைய பங்காளர்களின் நலனை நாங்கள் பாதுகாக்க வேண்டும். இதற்காக இரண்டு வெவ்வேறு அணிகளை தேர்வு செய்து, ஒரேநேரத்தில் டெஸ்ட் மற்றும் 20 ஓவர் போட்டி தொடரில் விளையாட வாய்ப்பு உள்ளது‘ என்று தெரிவித்தார்.
ஒருநாடு ஒரே சமயத்தில் இரண்டு வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவது என்பது எளிதான காரியம் இல்லை. வீரர்கள் தேர்வு, அணியை நிர்வகிப்பது உள்ளிட்ட பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியது வரும். ஆனால் 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஒரே நேரத்தில் 2 வடிவிலான போட்டிகளில் விளையாடியுள்ளது.