ஒரே ஓவரில் அதிக ரன்கள் – மோசமான சாதனையை பதிவு செய்த ஷிவம் டுபே
நியூசிலாந்து – இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று மவுண்ட் மவுங்கானுயில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 163 ரன்கள் அடித்தது. பின்னர் 164 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது. அந்த அணி 9 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்திருந்தது.
நியூசிலாந்து வெற்றிக்கு 11 ஓவரில் 100 ரன்கள் தேவைப்பட்டது. 10-வது ஓவரை ஷிவம் டுபே வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை செய்பெர்ட் சிக்சருக்கு தூக்கினார். 2-வது பந்தையும் சிக்சருக்கு தூக்கினார். 3-வது பந்தை பவுண்டரிக்கு துரத்தினார். 4-வது பந்தில் ஒரு ரன் விட்டுக்கொடுத்தார்.
முதல் நான்கு பந்தில் 17 ரன்கள் விட்டுக்கொடுத்தார். 5-வது பந்தை ராஸ் டெய்லர் பவுண்டரிக்கு துரத்தினார். அந்த பந்து நோ-பால் ஆக வீசினார் டுபே. இதனால் ஐந்து ரன்களுடன் ஒரு பந்தும் வீச வேண்டியிருந்தது. அந்த பந்தை டெய்லர் சிக்சருக்கு தூக்கினார். அதற்கு அடுத்த பந்தையும் சிக்சருக்கு தூக்கினார்.
ஆக மொத்தம் 6, 6, 4, 1, 4+1, 6, 6 என 34 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த பந்து வீச்சாளர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன் ஸ்டூவர்ட் பிராட் இந்தியாவுக்கு எதிராக ஆறு பந்திலும் ஆறு சிக்சர்கள் விட்டுக்கொடுத்து முதல் இடத்தில் உள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக பர்னெல் 2012-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 32 ரன்கள் விட்டுக்கொடுத்து 3-வது இடத்தில் உள்ளார்.