ஒரு வயது குழந்தைக்கு நாக்குக்கு பதில் சிறுநீரக பகுதியில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் – நடவடிக்கை எடுக்க கோரி தந்தை புகார்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் கே.கே.நகர் காலனியைச் சேர்ந்தவர் அஜித்குமார் (23). கொத்தனார். இவருடைய மனைவி கார்த்திகா. இவர்களுக்கு ஒரு வயதில் கவின் என்ற குழந்தை உள்ளது. கடந்த வருடம் மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தை கவினுக்கு நாக்கு பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மறு பரிசோதனைக்காக அவர்கள் கடந்த 21-ம் தேதி மதுரை அரசு மருத்துவமனைக்கு மீண்டும் குழந்தையைக் கொண்டு வந்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த குழந்தைக்கு நேற்று முன்தினம் காலை மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், அறுவை சிகிச்சை நாக்கில் செய்வதற்கு பதிலாக சிறுநீரக பகுதியில் செய்துவிட்டதாக பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து குழந்தையின் தந்தை அஜித்குமார் மதுரை அரசு மருத்துவமனை போலீசில் புகார் அளித்தார். அந்தப் புகாரில், என்னுடைய மகனுக்கு நாக்குப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்வதற்கு பதிலாக, சிறுநீரக பகுதியில் அறுவை சிகிச்சை செய்துவிட்டனர். இதுகுறித்து டாக்டர்களிடம் கேட்டபோது, மீண்டும் என் மகனை அழைத்துச் சென்று நாக்குப் பகுதியில் அறுவைசிகிச்சை செய்தனர். எனவே, சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறியிருந்தார். இதுதொடர்பாக மதுரை அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேல் கூறியதாவது: குழந்தை கவினுக்கு வாய்க்குள் நாக்கு ஒட்டிக்கொண்ட பிரச்சினை இருந்தது. இதனால் அந்தக் குழந்தைக்கு கடந்த ஆண்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, வீட்டுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் அறுவை சிகிச்சைக்காக 2 தினங்களுக்கு முன்பு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. குழந்தைக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. அப்போது, குழந்தை சிறுநீர்ப்பை விரிவடைந்து இருப்பது கண்டறியப்பட்டது. குழந்தையின் சிறுநீரக பகுதியில் முன்தோல் குறுக்கம் இருப்பது தெரியவந்தது. இதனால், மற்றொரு மயக்க மருந்தைத் தவிர்ப்பதற்காக ஒரே அமர்வில் விருத்தசேதனம் மற்றும் நாக்கு ஒட்டுதல் ஆகியவற்றிற்காக அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு குழந்தை நன்றாக இருக்கிறது. உணவு சாப்பிடுகிறது. சிறுநீர் கழிக்கிறது. குழந்தையின் உடல் நலம் சீராக இருக்கிறது என தெரிவித்தார்.

குழந்தைகள் நலத்துறை தலைவர் டாக்டர் மீனாட்சி சுந்தரி கூறுகையில், அறுவை சிகிச்சையின் போது குழந்தைக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. அப்போது குழந்தையின் வயிற்றுப்பகுதியில் வீக்கம் இருப்பது தெரிய வந்தது. மேலும், சிறுநீரக பகுதியில் அடைப்பு இருந்ததால் சிறுநீர் அதிக அளவில் இருந்தது உறுதியானது. அவ்வாறு இருக்கும்போது மீண்டும் மயக்க மருந்து கொடுத்தால் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால், சிறுநீரை வெளியேற்ற முயற்சி செய்தபோது, முன்பகுதியில் தோல்ஒட்டிய நிலையில் இருந்தது. அதனை இப்போது சரி செய்யாவிட்டாலும் பிற்காலத்தில் இந்த அறுவை சிகிச்சை செய்யவேண்டிய நிலை உள்ளது. அதன் காரணமாக ஒரே சமயத்தில் 2 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது என கூறினார்.