ஒரு நாள் முழுவதும் காத்திருந்து ராகுல் காந்தியை சந்தித்த மூதாட்டி – வைரலாகும் வீடியோ

கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி. ராகுல் காந்தி, கடந்த 2 நாட்களாக தொகுதி மக்களை சந்தித்து வருகிறார். வயநாட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ராகுல் காந்தி, தொகுதி மக்களை அவரவர் பகுதிகளுக்கே சென்று சந்தித்து வருகிறார்.

இதற்காக அவர் வரும் பாதையில் ஏராளமான மக்கள், பெண்கள், வயதானவர்கள் மணிக்கணக்கில் காத்திருந்தனர். அந்த வகையில் வயநாடு பகுதியில் சாலையோரம் உள்ள ஓட்டல் ஒன்றில் வயதான மூதாட்டி ஒருவர் காத்திருந்தார். ராகுல் அந்த வழியாக வந்ததும், அவரிடம் கட்சி நிர்வாகிகள், மூதாட்டி ஒருவர் காத்திருப்பதை தெரிவித்தனர்.

உடனே ராகுல், காரில் இருந்து இறங்கி அந்த மூதாட்டியின் அருகே சென்றார். அவர் அமர்ந்திருந்த இடத்துக்கு சென்ற ராகுல், அங்கு மூதாட்டியுடன் அமர்ந்து உணவு உண்டார். மேலும் அந்த மூதாட்டிக்கு தன் கைகளால் உணவும் வழங்கினார்.

ராகுல் காட்டிய அன்பில் நெகிழ்ந்து போன அந்த மூதாட்டி, ராகுலின், தலையை கைகளால் அணைத்து, முத்தம் கொடுத்து கொஞ்சினார். இந்த காட்சிகளை ராகுலுடன் சென்ற கட்சி நிர்வாகிகள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.

16 வினாடிகள் மட்டுமே ஓடும் இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. இதுபோல ராகுல் சுற்றுப்பயணம் செல்லும் வழியில் விபத்தில் சிக்கிய முதியவர் ஒருவரை காப்பாற்றி அவரை ஆம்புலன்சில் அனுப்பி வைத்தார். இந்த காட்சியும் சமூக வலைதளத்தில் லைக்குகளை அள்ளி வருகிறது.