ஒரு நல்ல மனிதர் வெளியேறுகிறார் – வெங்கையா நாயுடுவை பாராட்டிய காங்கிரஸ்

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 6-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க தேர்தல் வரும் 6-ம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

இதற்கிடையே, துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக மேற்குவங்காள கவர்னர் ஜெக்தீப் தங்கர் போட்டியிட உள்ளார்.

இந்நிலையில், ஒரு நல்ல மனிதர் வெளியேறுகிறார் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை காங்கிரஸ் பாராட்டி உள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், வெங்கையா நாயுடுவின் நகைச்சுவை மற்றும் புத்திசாலித்தனம் தவறவிடப்படும். பல சமயங்களில் அவர் எதிர்க்கட்சியினர் அனைவரையும் கிளர்ந்தெழச் செய்தார். ஆனால் இறுதியில் ஒரு நல்ல மனிதர் வெளியேறுகிறார். அவர் ஓய்வு பெற்றிருக்கலாம். ஆனால், அவர் சோர்வடைய மாட்டார் என எனக்கு தெரியும் என பதிவிட்டுள்ளார்.