ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை – முதல் முறையாக முதலிடத்தை பிடித்த பாபர் அசாம்

ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் வீரர்களின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதன்படி பேட்ஸ்மேன் தரவரிசையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் (865 புள்ளி) விராட்கோலியை பின்னுக்கு தள்ளி முதல்முறையாக முதலிடத்தை பிடித்துள்ளார். கடந்த வாரம் செஞ்சூரியனில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் 94 ரன்கள் குவித்ததால் 13 தரவரிசை புள்ளிகளை அறுவடை செய்த பாபர் அசாம் 2-வது இடத்தில் இருந்து நம்பர் ஒன் இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். அத்துடன் 41 மாதங்கள் நம்பர் ஒன் இடத்தை ஆக்கிரமித்து இருந்த இந்திய அணியின் கேப்டன் விராட்கோலியின் ஆதிக்கத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.

மேலும் ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த 4-வது பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை பாபர் அசாம் பெற்றுள்ளார். ஏற்கனவே அந்த நாட்டை சேர்ந்த ஜாகீர் அப்பாஸ் (1983-84), ஜாவித் மியாண்டட் (1988-89), முகமது யூசுப் (2003) ஆகியோர் முதலிடம் வகித்துள்ளனர். இந்திய கேப்டன் விராட்கோலி 857 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா (825 புள்ளி) 3-வது இடத்தில் தொடருகிறார்.