ஒடிடி தளத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளராக களம் இறங்கும் நடிகை சுருதி ஹாசன்

கமல்ஹாசனின் மூத்த மகளான சுருதி ஹாசன் இந்தியில் அறிமுகமாகி பின்னர் தமிழ், தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். தற்போது தமிழில் விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ள சுருதிஹாசன், அடுத்ததாக பிரபாசுக்கு ஜோடியாக சலார் என்கிற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் கமல்ஹாசனை போன்று, நடிகை சுருதிஹாசனும் பன்முகத்திறமை கொண்டவராக விளங்குகிறார். நடிப்பு, இசை மற்றும் பாடல்கள் பாடுவது என சினிமாவில் பல துறைகளில் கால்பதித்த சுருதிஹாசன், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தொகுப்பாளராக அவதாரம் எடுத்தார். தமிழ் சினிமா பிரபலங்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியை கடந்த சில வருடங்களுக்கு முன் தொகுத்து வழங்கிய சுருதிஹாசன், தற்போது மீண்டும் தொகுப்பாளராக களமிறங்க உள்ளாராம்.

அதன்படி, இவர் ஓடிடி தளத்துக்காக உருவாகும் தெலுங்கு நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.