ஐ.பி.எல் கிரிக்கெட் – லக்னோவை வீழ்த்தி ராஜஸ்தான் வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று  நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ -ராஜஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

இதையடுத்து களம் இறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் 2 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த கேப்டன் சாம்சன் 32 ரன்களில் வெளியேறினார்.

தொடர்ந்து ஜெய்ஸ்வால் 41 ரன்களிலும், தேவ்தத் படிக்கல் 39 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.  ரியான் பராக் 19, ஜேம்ஸ் நீஷம் 14 ரன்கள் அடித்தனர்.
இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 178  ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 179 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய லக்னோ அணியில் டி காக் 7 ரன் எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். கேப்டன் கே.எல். ராகுல் 10 ரன்னுடன் வெளியேற, தீபக் ஹூடா 39 பந்துகளில் 59 ரன்கள் குவித்தார்.  குணால் பாண்ட்யா 25 ரன்கள் எடுத்தார்.

20 ஓவர் முடிவில் லக்னோ அணி 8 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது.  இதையடுத்து ராஜஸ்தான் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில் அதிகபட்சமாக போல்ட், பிரசித் கிருஷ்ணா, ஓபேட் மெக்காய் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.