ஐரோப்பிய நாடுகள் மீது தாக்குதல்! – ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுக்கும் அல்கொய்தா

அமெரிக்காவில் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி, நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டிடத்தின் மீதும், ராணுவ தலைமையகமான பென்டகன் மீதும் அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் சுமார் 3 ஆயிரம் பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அல்கொய்தா இயக்கத்தின் தலைவரான ஒசாமா பின்லேடனை அமெரிக்கா தீவிரமாக தேடிவந்தது. 10 ஆண்டுகள் தேடுதல் வேட்டைக்கு பிறகு பாகிஸ்தானில் அபோதாபாத்தில் பதுங்கி இருந்த ஒசாமா பின்லேடனை அமெரிக்கப் படையினர் கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் 2-ந் தேதி சுட்டுக்கொன்றனர்.

இந்த நிலையில் இரட்டை கோபுர தாக்குதலின் 18-வது ஆண்டு நினைவு தினம் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அல்கொய்தா அமைப்பின் தற்போதைய தலைவரான அல் ஜவாஹிரி (வயது 68) வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

33 நிமிடங்கள் 28 வினாடிகள் ஓடக்கூடிய இந்த வீடியோவில் பல்வேறு விஷயங்களைக் குறிப்பிட்டு பேசியிருக்கும் அல் ஜவாஹிரி, அமெரிக்கா, இஸ்ரேல், ரஷியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மீது தாக்குதல் நடத்த அல்கொய்தா ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பயங்கரவாத இயக்கங்களின் ஆன்லைன் செயல்பாடுகளை கண்காணித்து வரும் எஸ்.ஐ.டி.இ. எனப்படும் புலனாய்வு குழு அந்த வீடியோவைக் கண்டறிந்து வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் அல் ஜவாஹிரி பேசியிருப்பதாவது:-

நமது புனிதப்போரில் ராணுவ இலக்குகளில் தாக்குதல் நடத்துவதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அமெரிக்க ராணுவம் உலகின் அனைத்து இடங்களிலும் தனது இருப்பை வெளிப்படுத்தி இருக்கிறது.

உலகின் கிழக்கில் இருந்து மேற்கு வரை அமெரிக்க ராணுவம் பரவி இருக்கிறது. உங்களின் நாடுகள் அமெரிக்கர்களால் சிதறியடிக்கப்படுகின்றன, ஊழல் பரப்பி விடப்படுகின்றன.

இதை தடுக்க வேண்டும். அல்கொய்தா அமைப்பில் உள்ளவர்கள் அமெரிக்கா, இஸ்ரேல், ரஷியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக தாக்குதலை தீவிரப்படுத்த வேண்டும்.

அல்கொய்தா அமைப்பின் ஆதரவாளர்களாக இருக்கும் சிலர் எதிரி நாட்டு ராணுவத்திடமோ அல்லது போலீசாரிடமோ சிக்கி சிறைக்கு சென்றவுடன் தங்களின் எண்ணத்தில் இருந்து மாறிவிடுகிறார்கள். அது தவறானது. அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை நினைத்து நம்முடைய எண்ணத்தை மாற்றக்கூடாது.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

எகிப்தை சேர்ந்த மருத்துவரான அல் ஜவாஹிரி, ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதற்கு பிறகு, அல்கொய்தா அமைப்பின் தலைவரானார். இவர் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பதுங்கியிருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *