ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்து – ஜெர்மனி, போர்ச்சுக்கல் தகுதி

கால்பந்து போட்டியில் உலக கோப்பைக்கு அடுத்து பெரிய போட்டியாக வர்ணிக்கப்படும் 16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி அடுத்த ஆண்டு (2020) ஜூன், ஜூலை மாதங்களில் முதல்முறையாக மொத்தம் 12 நாடுகளில் நடத்தப்படுகிறது.

இந்த போட்டிக்கான தகுதி சுற்று தற்போது பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. தகுதி சுற்றில் பங்கேற்றுள்ள 55 அணிகள் 10 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இதில் ‘பி’ பிரிவில் லக்சம்பர்க் சிட்டியில் நேற்று அரங்கேறிய கடைசி லீக்கில் நடப்பு சாம்பியன் போர்ச்சுகல் அணி, லக்சம்பர்க் அணியை சந்தித்தது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய போர்ச்சுகல் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணியில் புருனோ பெர்னாண்டஸ் (39-வது நிமிடம்), கேப்டன் கிறிஸ்டியானா ரொனால்டோ (86-வது நிமிடம்) கோல் போட்டனர். ரொனால்டோவுக்கு இது 99-வது சர்வதேச கோலாகும். இதே பிரிவில் செர்பியா- உக்ரைன் இடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

‘பி’ பிரிவில் முதல் 2 இடங்களை பிடித்த உக்ரைன் (6 வெற்றி, 2 டிராவுடன் 20 புள்ளி), போர்ச்சுகல் (5 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வியுடன் 17 புள்ளி) ஆகிய அணிகள் ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இதே போல் நேற்று முன்தினம் இரவு மோன்செங்கிளாட்பாச் நகரில் நடந்த (சி பிரிவு) ஒரு ஆட்டத்தில் முன்னாள் உலக சாம்பியன் ஜெர்மனி 4-0 என்ற கோல் கணக்கில் பெலாரசை பந்தாடியது. டோனி குரூஸ் 2 கோலும், ஜின்டர், கோரட்ஸ்கா தலா ஒரு கோலும் அடித்தனர். இன்னும் ஒரு லீக் எஞ்சியுள்ள நிலையில் ஜெர்மனி அணி (6 வெற்றி, ஒரு தோல்வியுடன் 18 புள்ளி) யூரோ போட்டிக்கு தொடர்ந்து 13-வது முறையாக தகுதி பெற்றது. இதே பிரிவில் வடக்கு அயர்லாந்து அணியுடன் டிரா கண்ட நெதர்லாந்து அணியும் (16 புள்ளி) யூரோ வாய்ப்பை உறுதி செய்தது.

கடந்த உலக கோப்பை போட்டியில் இறுதிசுற்று வரை வந்து வியப்பூட்டிய குரோஷிய அணி ‘இ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. அந்த அணி சொந்த ஊரில் நடந்த ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் சுலோவக்கியாவை வீழ்த்தியதோடு தனது பிரிவில் முதலிடத்தை (5 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வியுடன் 17 புள்ளி) பெற்று யூரோ போட்டி அதிர்ஷ்டத்தை தட்டிச்சென்றது.

ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் மொத்தம் 24 அணிகள் கலந்து கொள்கின்றன. இதுவரை 17 அணிகள் தகுதி பெற்று இருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *