ஐபிஎல் போட்டிக்காக 20வது முறையாக கொரோனா பரிசோதனை செய்துக் கொண்ட நடிகை பிரீத்தி ஜிந்தா

13-வது ஐபிஎல் தொடர் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் படுதோல்வியை சந்தித்திருந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அண்மையில் பெற்ற சில வெற்றிகளின் மூலம் மீண்டும் மீண்டெழுந்து புள்ளிகள் பட்டியலில் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

அந்த அணியின் நிர்வாகியான பிரீத்தி ஜிந்தா ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் மைதானத்திற்கு வருகை தந்து, தங்கள் அணியினரை உற்சாகப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் அவர் 20-வது முறையாக கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். இதனால் கொரோனா டெஸ்ட் குயின் என பிரீத்தி ஜிந்தாவிற்கு புது பட்டப்பெயரை நெட்டிசன்கள் சூட்டியுள்ளனர்.

அத்துடன் துபாயில் தனது கொரோனா தனிமைப்படுத்தல் அனுபவங்கள் குறித்து பகிர்ந்துள்ள பிரீத்தி ஜிந்தா, ‘‘பலரும் என்னிடம் ஐபிஎல் அணிகளுக்கு எப்படி கொரோனா பாதுகாப்பு வழங்கப்படுகிறது எனக் கேட்டிருந்தனர். அத்துடன் என்னுடைய அனுபவத்தையும் கேட்டிருந்தனர்.

நான் 6 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்தேன். ஒவ்வொரு 3-4 நாட்களுக்கும் இங்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அறையில் இருந்து வெளியே செல்லக்கூடாது. எங்கள் அணிக்கு என கொடுக்கப்பட்டிருக்கும் உணவகம் மற்றும் உடற்பயிற்சிக்கூடத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். எந்த உணவும் வெளியிலிருந்து கொண்டு வரக்கூடாது. வெளியாட்கள் யாருடனும் பழகக்கூடாது.

என்னைப்போன்று சுதந்திரப் பறவையாக இருக்க விரும்புவோருக்கு இது கடினமானதாகும். இருந்தாலும் கொரோனாவிற்கு இடையிலும் ஐபிஎல் நடத்தப்படுகிறது என்பதற்காக பிசிசிஐ மற்றும் மருத்துவக்குழுவினருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.