ஐபிஎல் பயிற்சிக்காக விராட் கோலி நாளை சென்னை வருகிறார்

14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 9-ந் தேதி முதல் மே 30-ந் தேதி வரை நடக்கிறது.

சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூர், கொல்கத்தா மற்றும் அகமதாபாத் ஆகிய 6 நகரங்களில் இந்த போட்டி நடக்கிறது.

இந்த போட்டியில் விளையாடும் 8 அணிகளும் உள்ளூர் மைதானத்தில் விளையாடாத வகையில் போட்டி அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது. டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மோதும் ஆட்டம் மும்பை, டெல்லி, பெங்களூர், கொல்கத்தா ஆகிய நகரங்களில் நடக்கிறது.

ஐ.பி.எல். போட்டிக்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சென்னையில் நேற்று பயிற்சியை தொடங்கியது. ஸ்ரீராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் உள்ள மைதானத்தில் அடுத்த 9 நாட்களுக்கு அவர்கள் பயிற்சியில் ஈடுபடுகிறார்கள்.

யசுவேந்திர சாஹல், நவ்தீப் சைனி, முகமது சிராஜ், ஹர்‌ஷல் படேல், தேஷ் பாண்டே, முகமது அசாருதீன், சச்சின் பேபி உள்பட 11 வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அணியின் இயக்குனர் மைக்கெசன், தலைமை பயிற்சியாளர் சைமன் காடிச், பேட்டிங் ஆலோசகர் சஞ்சய் பாங்கர் ஆகியோரது மேற்பார்வையில் வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுகிறார்கள்

இந்திய அணிக்கு 3 வடிவிலான போட்டிகளிலும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) கேப்டனாக இருக்கும் விராட் கோலி ஐ.பி.எல். போட்டியில் பெங்களூர் அணிக்கு கேப்டனாக பணியாற்றி வருகிறார்.

அவர் பயிற்சிக்காக நாளை சென்னை வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனிமை காலம் முடிந்தபிறகு வீராட் கோலி அணியில் இணைந்து பயிற்சியில் ஈடுபடுவார்.

ஐ.பி.எல். போட்டியின் தொடக்க ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்சை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.

ஐ.பி.எல். போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தில் தொடக்கத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வந்தது. தற்போது வீரர்கள் மும்பையில் பயிற்சி பெற்று வருகிறார்கள்.

சி.எஸ்.கே. தொடக்க ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்சை ஏப்ரல் 10-ந் தேதி எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் மும்பையில் நடக்கிறது.

இந்த ஐ.பி.எல். போட்டியில் பல்வேறு புதிய விதிகள் வெளியிடப்பட்டுள்ளன. சாப்ட் சிக்னல் அவுட் நீக்கப்பட்டுள்ளது. இது தவிர விதிகளில் பல்வேறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.