ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடுவது சந்தேகம்

பயோ பபுளில் இருந்த வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட காரணத்தினால் மறுதேதி ஏதும் குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள ஐபிஎல் 2021 சீசனின் எஞ்சியுள்ள போட்டிகளில் இங்கிலாந்து அணியின் வீரர்கள் விளையாடுவது சந்தேகம் என தெரிவித்துள்ளார் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரிய இயக்குனர் ஆஷ்லே ஜைல்ஸ்.

கேப்டன் மோர்கன், பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜாஸ் பட்லர் முதலான வீரர்கள் ஐபிஎல் தொடரில் எஞ்சியுள்ள போட்டிகளில் விளையாடுவது சிரமம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “இங்கிலாந்து அணி பங்கேற்று விளையாடவுள்ள சர்வதேச போட்டிகளில் இந்த வீரர்களின் பங்கேற்பு நிச்சயம் இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். திட்டமிட்டபடி சர்வதேச தொடர் நடந்தால், அவர்கள் தேசிய அணிக்காக விளையாட வேண்டியிருக்கும். அதனால் 2021 சீசனில் எஞ்சியுள்ள போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடுவது சந்தேகம்தான். சர்வதேசப் போட்டிகளின் அட்டவணையில் எந்தவித பாதிப்பும் இல்லை என்றால், இங்கிலாந்து வீரர்கள் எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவார்கள்” என்று அவர் தெரிவித்தார்.

வரும் ஜூன் முதல் இலங்கை, பாகிஸ்தான், இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுடன் இங்கிலாந்து அணி விளையாடவுள்ளது. மேலும், டி20 உலகக்கோப்பை தொடரிலும் இங்கிலாந்து விளையாடுகிறது. அதற்கு முன்னதாக நியூசிலாந்து அணியுடன் இங்கிலாந்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.